ராபின் ஷர்மா
ராபின் ஷர்மா தன் முதல் புத்தகத்தைக் கொண்டு வந்தபோது தான் உலகத்தை ஈர்க்கப் போவதாக நம்பினாரோ என்னவோ? ஆனால், அவர் சொந்தமாக அச்சடித்த 2000 பிரதிகளும், அவர் வீட்டு சமையலறையை ஆக்கிரமித்துக் கொண்டது.
சுலபத்தவணையில் இல்லாமல் சிரமத் தவணையில் மெல்லமெல்ல விற்பனையாகத் தொடங்கியது.
அதேபோல, அவர் நிகழ்த்திய முதல் பயிலரங்கில், பங்கேற்பாளர்களாக முதலில் கலந்து கொண்டவர்கள் 23 பேர்கள். அதில் 21பேர்கள், அவருடைய குடும்ப உறுப்பினர்கள்.
இரண்டாவது புத்தகத்தையும் அவர்தான் கொண்டு வந்தார். அதுவும் ஆமை வேகத்தில்தான் நகர்ந்து கொண்டிருந்தது. ஹேர்பர் கோலின்ஸ் நிறுவனத்தின் தலைவர் எட் கார்ஸன், ராபின் ஷர்மாவை புத்தகக்கடையில் சந்தித்தார். அந்த சந்திப்பு அத்தனையையும் மாற்றியது. இன்று அவருடைய புத்தகங்கள், 90 நாடுகளில் 60 மொழிகளில் வெளியாகின்றன.
சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்களில் பலரும் கவிதைக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால், ராபின்ஷர்மா கவிதைகளைப் பெரிதும் படிப்பவர் மட்டுமல்ல. பரிந்துரை செய்பவரும் கூட!!
வாழ்வியல் ஞானத்தை ஒற்றைக் கவிதையில்கூட கண்டுகொள்ள முடியும் என்பது ராபின்ஷர்மாவின் நம்பிக்கை. கனடா நாட்டில் பிறந்து வளர்ந்த போதும், இந்தியக்குடும்பங்களின் இயல்புப்படி, பல நீதிக் கதைகளை ராபின் ஷர்மாவுக்கு குழந்தைப் பருவத்தில் கூறியிருந்தார்கள். இவற்றின் புதிய பரிமாணங்களையே அவர் தன் உரைகளில் புகுத்தி வருகிறார்.
ராபின் ஷர்மாவின் இந்திய விருப்பங்களில் இணையில்லாதது இமயமலை. அந்த மலையின் ஆன்தீக அதிர்வுகளுக்காக அதனை மிக முக்கியமாகக் கருதும் ராபின்ஷர்மா, இன்னொரு சுவாரசியமான கோணத்திலும் இமயமலை பற்றிச் சொல்கிறார்.
“வாழ்க்கை என்பதே மலையேற்றம் அல்லாமல் வேறென்ன? ஞானத்தை நோக்கிய பயணத்தை
ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டே உச்சியை விட்டுக் கண்கள் அகலாமல் உற்சாகமாக
நடைபோடுவதற்குப் பெயர்தான் வாழ்க்கை.”
கீழைநாடுகளின் தத்துவப்பார்வையும் மேலைநாடுகளின் முன்னேற்றச்சிந்தனையும் சங்கமிக்கும் கோட்பாடுகள் ராபின்ஷர்மாவின் தனித் தன்மை.
அவரது சிந்தனைகளில் வெளிச்சமிடும் வீச்சுக்கு இந்தக் கலவையே காரணம்.
- ”பெரும்பாலான மனிதர்கள், தங்கள் வாழ்வின் மிகச்சிறிய பகுதியையே தீவிரத்துடன் வாழ்ந்ததாய் பின்னாளில் வருத்தம் கொள்கிறார்கள். முழு வாழ்வையும் தீவிரத்துடன் வாழ்வதே முன்னேற்றத்துக்கான பணி”.
- ”உங்கள் ஒற்றை நாள் வாழ்க்கை என்பதே உங்கள் மொத்த வாழ்வின் ஒருநாள் சுருக்கம்தான். எனவே ஒவ்வொரு நாளையும் முழுமையாய் வாழுங்கள்”.
- ”வலிகளே வாழ்வின் மிக முக்கியமான பாடங்களைக் கற்றுத்தருகின்றன”.
- ”அச்சம் என்பது வளர்வதற்காக வாழ்க்கை ஏற்படுத்தியிருக்கும் வாய்ப்புகளில் ஒன்று. உங்களை அச்சத்திற்குள்ளாக்கும் விஷயங்களை ஆவலுடன் எதிர்கொள்ளுங்கள்.”
- ”ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது, தலைமைப் பண்புள்ளவர்களை வேகமாக வளர்த்தெடுப்பதில் இருக்கிறது”.
- ”மனிதர்கள் பாராட்டுக்களை விரும்புகிறார்கள். தங்கள் பெருமையை பிறர் உணர வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்”.
- ”நாம் நம் செயல்களையும் பணிகளையும் கொண்டாட வேண்டும். செயல்கள் நமக்குப் பெருமையும் குதூகலமும் தரவேண்டும். பணிபுரிகிற இடம், குதூகலம் மிக்கதாய் ஆகிற போது தான், மனிதர்கள் தங்கள் தலைசிறந்த திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.
- ”நீங்கள் இன்று எடுக்கும் முடிவுகளே உங்கள் நாளைகளைத் தீர்மானிக்கின்றன”.
”நம் சின்னச்சின்ன பங்களிப்புகளே நம் வாழ்வின் தரத்தையும் அர்த்தத்தையும் தீர்மானிக்கின்றன”.- ”தோல்விகள், நம்மை மேம்படுத்துகின்றன. வெற்றிக்கான தேசிய நெடுஞ்சாலைகளே தோல்விகள்.”
- ”நம்மில் உள்ள குழந்தைத்தனத்தை மீட்டெடுப்பது மிகவும் எளிது. ஏனென்றால் நாம் எல்லோருமே குழந்தைகளாக இருந்தவர்கள் உங்களில் இருக்கும் குழந்தை, வளர்ந்திருக்கும் உங்களை என்னவென்று நினைக்கும் என்பதை மட்டும் யோசித்துப் பாருங்கள்”.
நன்றி: நமது நம்பிக்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக