புதன், 29 ஆகஸ்ட், 2012

உங்கள் பக்கத்தில் யார்? - அத்வைத் சதானந்த்

நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது. டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கிக்கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது. சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. 

சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது. இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர் விரும்பவில்லை.

எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் யோசியுங்கள், உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? உற்சாகமானவரா? சுறுசுறுப்பானவரா? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா? இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர். மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள். எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

லட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள். எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.


நன்றி: நமது நம்பிக்கை

12 கருத்துகள்:

 1. அட அசத்தல் தான் சிவஹரி....

  உன் நண்பனை காட்டு உன்னைப்பற்றி சொல்கிறேன் என்ற சொல் நினைவுக்கு வருகிறது உன்னுடைய இந்த பதிவை படிக்கும்போது...

  உண்மையே...

  நம் அருகில் இருப்பவர் நம்மை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி நல்வழியில் நடத்துபவராக இருக்கவேண்டும்.. அது நட்பாகவோ அல்லது உறவாகவோ ( தாய், தந்தை, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி இப்படி எத்தனையோ...) அப்படி இருந்தால் வெற்றியின் சிகரம் தொடுவது எளிதாகும்...

  சின்னக்குழந்தை கூட தான் ஒரு பரிசு வாங்கும்போது தன்னை எல்லோரும் கைத்தட்டி உற்சாகப்படுத்தவேண்டும் என்று நினைக்கும்போது ஒவ்வொரு மனிதனும் அப்படி நினைப்பதில் தவறே இல்லை...

  நல்ல ஆசிரியரிடத்தில் படிக்கும் மாணாக்கன் வாழ்க்கையில் முன்னேறி வெற்றிகளை தொடும்போது மூலக்காரணமான ஆசிரியரை நன்றியுடன் நினைத்துக்கொள்வான் அந்த நேரத்திலும்...

  அது சரி, அதென்ன உவமை சிவஹரி? தூங்குறவங்க பக்கத்தில் உட்கார்ந்தால் ட்ரைவரால் ஒழுங்கா வண்டி ஓட்ட முடியாதுன்னு போட்டிருக்கே?

  யாருப்பா அது தூங்கி தூங்கி ட்ரைவரை சிரமப்படுத்துறது??

  அருமையான பயனுள்ள பதிவு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவஹரி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரிவான அலசலுடன் பொருந்திய மறுமொழிக்கு என் முதற்கண் நன்றிகள் பற்பல அக்கா.!

   மேற்காணும் கட்டுரை ஒரு இணைய மாத இதழிலில் இருந்து எடுக்கப்பட்டது. அங்கிருக்கும் கட்டுரைகளில் படித்து அதன் சாரம் பிடித்தபொழுதே இங்கே பதிந்தேன் அக்கா.

   தூங்கி தூங்கி ட்ரைவரை மட்டுமல்ல.. வீட்டுக்காரரையும் சிரமப்படுத்துற லிஸ்டில் நெறைய நெறைய பேர் இருக்காங்களாம் அக்கா.


   நன்றி

   நீக்கு
 2. நிறைய சிந்திக்க வைத்த கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி சிவா. மிக நன்றாக இருந்தது. நல்ல சிந்தனைதரும் இது போன்ற தொடரை தொடர்ந்து தா தம்பி.

  என் அருகில் இருப்பவர்களை பைனாகுலரில் தேடியபடி....?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் தரம் மிகு கருத்திற்கும் நன்றிகள் பற்பல அக்கா.

   சிந்திக்க வைக்கும் கட்டுரைகளை சில நேரங்களில் இணையத்தில் கண்டு படிப்பதுண்டு..!

   தொடர்ந்து தேடி பகிர முயற்சிகின்றேன் அக்கா.

   நன்றி

   (ஆமா .. உங்க பைனாக்குலரில் அருகில் இருப்பவரைக் கண்டு புடிச்சிட்டீங்களா.. ???

   நீக்கு
 3. இரண்டு மூன்று பதிவுகளை வாசித்தேன்... நல்ல தொகுப்பாய் இருக்கிறது.. தொடரவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கு என் சார்பில் இனிய வரவேற்புகள் சகோ.!

   தொகுப்பினை வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சகோ.!

   நீக்கு
 4. அன்புள்ள சிவஹரி,
  இன்றைய வலைச்சரத்தில் இந்தப் பதிவை பகிர்ந்துள்ளேன்.

  http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_13.html

  வருகை தருக!
  நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கு என் வலைப்பூவின் சார்பில் மனமுவந்த வரவேற்புகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

   என் வலைப்பூவினை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு பணிவான நன்றிகள் பற்பல சகோ.!

   இந்த அறிவிப்பு வருமுன்னரே நாங்க பின்னூட்டம் போட்டுடோமாக்கும் :)

   நன்றி

   நீக்கு
 5. வணக்கம் சிவஹரி....


  உங்கள் பக்கத்தில் யார் என்ற தலைப்பில் எழுதப்பட்ட. ஆக்கம் மிக சிற்பாக உள்ளது.உண்மையில் வாழ்கையில் முன்னேற நினைக்கும் ஒரு நல்ல மனிதன் தேனீகள் போல செயற்படும் நண்பர்களுடன் சேர்ந்தாள் வாழ்கை பிரகாசிக்கும். நல்ல ஒரு உண்மையை சொல்லிவிட்டிர்கள்அதிலும் இலட்சியம் உள்ள நண்பனுடன் வாழ்வது சிறந்தது . என்ற கருத்தை முன்வைத்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த படைப்பு வலைச்சரம் என்ற வலைப்பூவில் சிறந்த ஆக்கமாக இனங் கானப்பட்டு 13/10/2012 வெளியிடப்பட்டுள்ளது.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னுடைய வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு முதற்கண் எந்தன் மனமுவந்த வரவேற்புகள் சகோ.!

   இந்தப் பாராட்டும் விமர்சனமும் உண்மையான பதிவருக்கும், பதிவிற்கும் மட்டுமே போய்ச் சேர வேண்டும் என்பதில் உறுதியாய் நிற்கின்றேன்.

   இவ்வாக்கம் என்னுடையதன்று. நமது நம்பிக்கை மாத இதழில் நான் விரும்பிப் படிக்கும் தன்னம்பிக்கை கட்டுரைகளில் வெளிவந்த ஒரு கட்டுரையை மற்ற உறவுகள் படித்துப் பயன்பெறட்டும் என்ற நோக்கிலே இங்கே பதித்திருக்கின்றேன்.

   பெரும்பாலும் நான் பிற தளங்களில் இருக்கும் நற்கருத்துகளை எடுத்துக் கையாண்டால் அத்தளத்திற்கு நன்றி சொல்லியே என் பதிவதனை நிறைவு செய்வேன்.

   அப்படியே இப்பதிவிற்கும் நன்றி சொல்லியிருக்கின்றேன்.தாங்கள் கொடுத்த பாராட்டுகள் அனைத்தும் படைத்தவருக்கே போய்ச் சேரும் என்ற நம்பிக்கையில்....


   நன்றி

   நீக்கு
 6. உற்சாகமூட்டும் பகிர்வுகள்... பாராட்டுக்கள்..

  வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்தன் வலைப்பூவிற்கு வருகை தந்த தங்களை மலர்மனதுடன் வரவேற்கின்றேன் சகோ.!

   கருத்திட்டமைக்கு நன்றி .!

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...