புதன், 3 அக்டோபர், 2012

மனமொடு வாழியவே!

அன்று,

தேனொடு புரளும் தெள்ளுதமிழ் குறத்திவழி
ஊனொடு மெய்யாய் உரைத்தாளே; அறிமின்
பாரொடு நீயொழுக பாவைதனைத் தேடிட்டே
ஆறுகடல் தாண்டி அகிலமதின் கடைசேர
நாலாறு வயதினில் நங்கை பொறுக்கி
ஊர்கூட்டி மாலைசூட உலகமுங் வென்றேன்

அந்திவானங் கறுக்க அழகிலாடு மஞ்ஞையன்ன
அருந்தளிர் நடைகண்டே அகிலந்தனை வென்றோமடி
எங்குலத்தான் மொழிதனையே இசையின் உச்சமென
சங்கெடுத்து ஊதினோம் சலிப்பிலா நத்தையாய்

இன்று,

பெற்ற பிள்ளையவன் பெருங்கடன் கொண்டானென
உற்ற துணையவள் ஒதுக்கிட்டாள் நம்மையுமே
கற்ற தொழிலொடு காலமுங் கரைந்திடவோர்
சுற்ற முருவமாய் சுழன்றதே நம்வாழ்வு

காய்ந்த வயிறும் களைத்திட்ட நடையும்
ஓய்ந்தோ டிடுநாளும் உளதே நமக்கு
ஆவொடு மகவு அருந்திடும் பாலொப்ப

நாமொடு வாழ்வும் நலமுடன் வளர
தாயொடு சேயாய் தன்மடி அணைத்தேனே

என்றும்

சிறப்புருஞ் செல்வம் சீர்கொண்ட மனதே
சிற்றறிவோர் கெட்டுதலு மிலதே - பிறப்பொடு
இறப்பும் பெருந்துயர் அடைப்பின் மறப்போர்
வீரன் மகிழ்ந்தேற் பானவ  னென்னாளுமே!


8 கருத்துகள்:

  1. அருமை வரிகள்...

    'என்றும்' பிடித்தவை...

    அந்தப்படம் : என்ன எழுதுவதென்ற தெரியவில்லை... பலவற்றை சிந்திக்க வைக்கிறது...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கம் போல தங்களின் கருத்துகளுக்கு எந்தன் நன்றிகள் பற்பலவே!

      இப்படம் என்னை இரண்டாவது முறை மாற்றி எழுதிடவும் தூண்டிற்று. அதனால் விளைந்த வரிகளே இவை.

      நன்றி

      நீக்கு
  2. கொடுமையிலும் கொடுமை முதுமையில் தனிமை,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதற்கண் தங்களுக்கு என் சார்பில் இனிய வரவேற்புகள் சகோ.!

      ஆம், முதுமையில் தனிமைப்படுவோர் படும் இன்னல்களை வரிகளாக வடிக்க இயலாது. வயதானவர்களின் மனப்பாங்கும் செயல்பாடும் பச்சிளங்குழந்தைகளைப் போன்று இருப்பதைக் கண்டு கொண்டிருக்கின்றோம் தானே!

      ஒரு பச்சிளங்குழந்தையை தவிக்க விடின் எவ்வளவு சிரமத்தை எதிர்கொள்ளுமோ அது போலத்தான் வயதானவர்களின் நிலையும்.

      நாமும் அந்த நிலையை நோக்கியே பயணிக்கின்றோம் என்பதனை மறந்து இன்று பெரும்பாலான இளைஞர்கள் தன் பெற்றோரை ஒதுக்கி தள்ளுகின்றனர்.

      கருத்திற்கு நன்றி

      நீக்கு
  3. முதுமையில் தன் வாழ்க்கை துணையை இழுத்து செல்லும் முதியவர் பாராட்டபடவேண்டியவர். சொல்லாமல் சொல்லும் அறிவுரை: முதுமையிலும் கைவிடமாட்டேன் என்கிறது.

    பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பூவின் சார்பில் தங்களுக்கு என் இனிய வரவேற்புகள்.!

      தங்களின் உளக் கருத்தினைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பற்பல சகோ.!


      நீக்கு
  4. சீரும் சிறப்புமாக திருமணம் செய்துக்கொண்டு வேண்டி வரமிருந்து பிள்ளைகள் பெற்றுக்கொண்டு பெற்ற பிள்ளைகளை தன் அன்பும் பரிவும் கருணையும் பாசமும் வாஞ்சையுமாக கல்வி ஒழுக்கத்துடன் பயிற்றுவித்து பிள்ளைகள் ஒரு நல்ல நிலைக்கு வந்தப்பின் ஓய்வெடுக்க முதுமை துணை புரிய......

    பிள்ளைகளோ தனக்கென்று ஒரு குடும்பம் வந்த உடனே தன் பெற்றோரை சட்டென உதறிவிடுவதும்... பெற்றோரும் ரோஷம் உள்ள மனதினர் அல்லவா? பிள்ளையின் கை எதிர்ப்பார்த்து இருப்பதால் தானே இந்நிலை என்று அதையும் ஒதுக்கி தன் உடலில் வலு இருக்கும் வரை தனக்கு தெரிந்த தொழில் செய்து தன் இணையை காப்பாற்ற உழைத்து தன் வயிற்றை கழுவிட நினைத்தால் அப்போதும் விதி விட்டுவிடாமல் சுற்றவிடுகிறதே சுற்றத்தார் வடிவினிலே...

    உண்ண உணவும் கிடைக்காமல், வயிறு ஒட்டி, உடம்பும் சோர்ந்து நடையும் தளர்ந்து, மனமோ செத்து, ஆனாலும் பிள்ளைகள் கைவிட்டாலும் உற்றவன் கைவிடாது தன் மனைவியை தாய்ப்பசு கன்றுக்கு எப்படி பாசத்துடன் அணைத்துக்கொள்கிறதோ அதுபோல் உற்றவன் தாயாய் மாறி தாயுமானவனாய் தன் மனைவியை காக்கும் இந்த இடம் வரிகள் படிக்கும்போது நம் நிலை என்னவோ பிற்காலத்தில் என்ற பயம் வயிற்றில் பந்தாய் அடைக்கிறது....

    அன்று பிள்ளைக்காய் வாழ்ந்து இன்று தன் இணைக்காய் வாழ்ந்து என்றும் இருவரும் இணை பிரியாது தன் கையே தனக்கு உதவி என்ற நிலையில் பிறந்தோர் எல்லோரும் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் போகிறார் என்றாலும் அந்த இறப்புவரை அந்நிலையிலும் கைவிட்டுவிடாமல் காக்கும் கவசமாக கணவன் அமையப்பெறுவது உண்மையாகவே பெண்களின் பாக்கியமாகும்..

    யோசிக்கவைத்த மிக அழகிய சிந்தனை வாழ்வியல் அறிவுரை கவிதை வரிகள் தம்பி... சின்னப்பிள்ளையின் சீரிய சிந்தனை வரிகள் சிறப்பு....அன்புவாழ்த்துகள் அற்புதமான கவிதைக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான பின்னூட்டம். அப்படியே என் உள்ளத்தை ஆராயந்து எழுதியது போல் அமைந்திருக்கின்றது அக்கா.

      அசாதாரண காலத்தில் கூட குறையாத அன்பும் அரவணைப்பும் கொண்ட காவியத்தலைவன் என்ற நோக்கினை வைத்து கிறுக்கிய என் வரிகளுக்கு அற்புதமான மறுமொழி அக்கா.

      நன்றிங்,

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...