செவ்வாய், 16 அக்டோபர், 2012

எப்போது வருவாய் ? எங்கள் ஊரின் இன்றைய நிலை மாற.. - மீள் பதிவு


எப்போது வருவாய்?.. எங்கள் நிலை உயர

கிராமப்புறங்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என்று கூறிய மாண்புமிகு பாரத முன்னாள் குடியரசுத்தலைவரும், இளைஞர்களின் விடிவெள்ளியும், நம் மண்ணில் பிறந்த தன்னிகற்ற தலைவருமான டாக்டர். ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் கட்டுரையிலே நம் பாரத தேசத்தை வளர்ச்சியுறச்செய்ய வேண்டுமானல் அதற்கு கிராமப்புற மக்களிடம் போதிய விழிப்புணர்வு தேவை என்று கூறியதன் வழி எங்கள் கிராமத்தை பற்றி அறியத்தருகின்றேன். 

 எங்கள் கிராமமோ இன்னும் வளர்ச்சியின் சரியான பாதையை அதனால் எட்ட முடியாமல் தவிக்கின்றது.

இராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை என்ற கொடைகொடுத்து சிவந்த செங்கையோன் சீதக்காதி வள்ளலின் பேரூருக்கு அருகாமையிலே 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வைகை என்னும் ஒரு குக்கிராமத்தைப்பற்றி உங்களிடம் அறியத்தருகின்றேன்.

அந்த காலத்தில் சிவகங்கை சீமையை ஆண்ட இராணி மங்கம்மாள் அம்மையார் அவர்களால் திருச்செந்தூர் செல்லும் சாலை எனக்குறித்து இராணி மங்கம்மாள் சாலை என்றதொரு புகழ் கொண்டது. 

 இச்சாலை இராமேசுவரம் முதல் பிரப்பன்வலசை, கடுக்காய்வலசை, ரெகுநாதபுரம், வண்ணாங்குண்டு ,திருப்புல்லாணி, வைகை, கொம்பூதி, ஏர்வாடி,சிக்கல், சாயல்குடி என வழித்தடமாகக்கொண்டு சாயல்குடி, வேம்பார், ஆத்தூர், திருச்செந்தூர் சென்றடையும். இச்சாலையை ஒட்டி இன்னமும் அந்த காலத்தில் நட்டுவைத்த புளியமரங்கள் இருக்கின்றது.

 எங்கள் ஊரின் சாலையின் வழியே சிற்சில வருடங்களுக்கு முன்னால் திருச்செந்தூருக்கு இராமநாதபுரத்தின் கிழக்கு பகுதியில் உள்ள மக்கள் (பாதயாத்திரை) நடைபயணமாகச் செல்லும் பக்தர்களையும் கண்டுள்ளேன். தை மாத அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற தினங்களில் திருப்புல்லாணிக்கு அருகே உள்ள சேதுக்கரைக்கு புனித நீராடச்செல்லும் பக்தர்கள் நடைபயணமாகவும், மாட்டுவண்டியிலும் பயணிப்பதை பார்த்துள்ளேன்.
அந்தக்காலத்தில் எங்கள் சுற்றுவட்டாரப் பகுதியிலே எங்கள் ஊரில் மட்டும் தான் பள்ளிக்கூடம் இருந்துள்ளது. 


அடுத்த பள்ளிக்கூடம் திரு உத்திரகோசமங்கையில் இருந்துள்ளது. 1950-’70 களில் எங்கள் ஊரில் நல்லதொரு வளமும், செழிமையும் அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு போதுமானதாக இருந்துள்ளது. கீழக்கரை சுற்றுவட்டாரப் பகுதியிலேயே வைகையில் தான் இன்றளவும் பெரிய விநாயகர் சிலையும், பழமையான கோவில்களும் உள்ளன.


அறிவியல் வளர்ச்சியின் விளைவால் உலகம் இன்று தனக்கென்று உரிய பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் எங்கள் கிராம மக்கள் வளர்ச்சியையும், செழிப்பையும் தேடி நகரத்தை நோக்கி புறப்பட்டு விட்டனர். 1970-ன் பிற்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கப்பெறாமல் அவர்கள் இராமநாதபுரம், இராமேசுவரம், திருப்பத்தூர், மதுரை, சிவகங்கை, கீழக்கரை போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். இன்றும் வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.

எங்கள் ஊரில் இருந்து சென்ற வம்சாவழியினரின் சிற்சில குடும்பங்களை ஒரு நன்னாளில் மட்டுமே அதுவும் அரிதாகவே காணமுடியும். அந்நாள் மாசி மாத மஹாசிவராத்திரி.

இந்த நாளில் மட்டும் தான் வைகை களை கட்டி நிரம்பும். வெளியில் சென்ற மக்களில் சிலரது குடும்பங்கள் தங்களது குல தெய்வ வழிபாட்டிற்காக வருவதுண்டு. வெவ்வேறு இனத்தவரைக்கொண்ட வைகையிலே எல்லாக்கோயில்களில் வாழ்கின்ற தெய்வங்களுக்கும் பூசை கிடைக்கப்படுவது அன்றொரு நாளே.. அதுவும் கடந்த வருடங்களை ஒப்பிடும் பொழுது மக்களின் வரவு குறைந்துவிட்டது. காரணம் கடவுள் அதிகமாய் செல்வங்களை கொடுத்து விட்டார் போலும். J

காரணம் தான் என்ன?

மக்களின் தேவையை நம்மால் முழுதாக புரிந்து கொள்ள முடியாவிடிலும், ஓரளவு தெரிந்து கொள்ளலாம். அந்தவகையில் மிக முக்கியமாக அறியப்பெறுவது போக்குவரத்து வசதி.

கிராமங்களுக்கும் நகரங்களுக்குமிடையே தொடர்பு ஏற்பட பாலமாய் அமைவது சாலைகளே. அந்தச் சாலைகள் மட்டும் இருந்தால் போதாது. அதில் பயணிக்க வாகனங்களும் வேண்டும். எங்கள் ஊரில் உள்ள சாலை கிழக்கு-மேற்கு மார்க்கமாக அமையப்பெற்றுள்ளது. கிழக்கே தில்லையேந்தல் என்ற கிராமமும் மேற்கே நத்தம் என்னும் கிராமமும் அமையப் பெற்றுள்ளது. 

களரிக்கண்மாய், கொம்பூதிக் கண்மாய் ஆகியவற்றில் இருந்து மழைக்காலத்தில் வரும் மழைநீரானது, கொம்பூதி, நத்தம்-பழஞ்சிறை, வைகை- தில்லையேந்தல் வழியாக திருப்புல்லாணி கடல் முகத்திற்குச் செல்லும் மேற்கே உள்ள நத்தம்-பழஞ்சிறை ஓடைக்கு அரசால் ஒரு தரமிகுந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் ஊரையொட்டிய ஓடைப்பகுதிக்கு ஓடுபாலம் (தரைப்பாலம்) மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

எங்கள் ஊரின் மேற்கே நத்தம் 1 முதல் 1.5 கி.மீ தொலைவு உள்ளது. அவ்வூரின் வழியே அரசுப் பேருந்து கீழக்கரை-கொம்பூதி, கீழக்கரை- திரு உத்திரகோசமங்கை, கீழக்கரை- இராமநாதபுரம் (வழி களரி, கொம்பூதி),இராமநாதபுரம்-நத்தம் என அரசுப்பேருந்துகள் இயங்கி வருகின்றன. அதேபோல் கிழக்குப்பகுதியை குறிப்பிடின் இராமநாதபுரம் – கீழக்கரை – ஏர்வாடி – சாயல்குடி – தூத்துக்குடி - கன்னியாகுமரி முக்கியச்சாலை. இது தான் கிழக்குக் கடற்கரைச் சாலை (EAST COAST ROAD). இச்சாலையின் அருகில் உள்ள கிராமங்களுக்கும் அரசுப்பேருந்து செல்வதால் பாளையரேந்தல், மோர்க்குளம் ஆகிய ஊர்கள் பயனடைகின்றன.

ஆனால் எந்தவகையிலும் வைகை மற்றும் தில்லையேந்தல் ஆகிய கிராமங்களுக்கு பயணத்திற்கான பேருந்து வசதிகள் இல்லை. வைகை மக்கள் இன்னமும் மேற்கில் 1.5 கி.மீ நடந்து சென்று நத்தத்தில் இருந்து தான் பேருந்து பயணம் மேற்கொள்கின்றனர். மிதிவண்டி உள்ளவர்கள் மிதிவண்டியிலே கீழக்கரை சென்று வந்து விடுகின்றனர். ஆனால் மிதிவண்டியே இல்லாதவர்கள் என்ன செய்வது ? ஆண்களுக்கு சரி.. பெண்களுக்கு ? அதுவும் பழைமையோடு பவனிவரும் வைகையில் பெண்களும் மிதிவண்டி ஓட்டுவது சாத்தியமா ? அப்படியே சரி எனில் எல்லா வயதினருக்கும் இது பொருந்துமா ?.

தமிழக அரசின் ஆணையின்கீழ் இயங்கிய சிற்றுந்து போக்குவரத்து வசதி 3 வருட காலத்திற்கு வைகை வழியே பயணிக்கத்தான் செய்தது. அந்த மூன்று வருட காலத்திற்குள் இரண்டு முறை இடைநிறுத்தம். முதலில் 2.1/2 ஆண்டுகள் கீழக்கரைவாழ் ஒரு நிறுவனம் தனது சிற்றுந்தை பயணிக்க வைத்தது. 

அந்த நிறுவனம் இழப்பை சந்தித்து விட்டோம் எனவும், சாலை மற்றும் பாலத்தின் வசதிகள் போதுமானதாக இல்லை என்ற நல்ல பல காரணங்களை காட்டி நிறுத்திக்கொண்டது. அதன்பின்பு யார் செய்த புண்ணியமோ என எண்ணும் வகையில் நத்ததிற்கு அருகில் உள்ள வேளானூரைச் சார்ந்த ஒரு பெருமகனார் தனது சிற்றுந்தை பயணிக்க வைத்தார். அதுவும் 2 ஆண்டுகளாக இல்லை. அவருக்கும் ஏதோ காரணங்கள் தென்பட்டிருக்கும் போல..

இந்நிலையில் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் எங்கள் ஊரில் எழில் மிகு மாந்தர்கள் தங்களுக்கேற்ற முறையில் பயணித்துத்தான் கொண்டிருக்கின்றனர். ஊரில் இருந்த மக்களில் சில குடும்பத்தினர் வெளியேறிக்கொண்டே தான் இருக்கின்றனர். அவர்கள் சொல்லும் முக்கிய காரணமும் நமக்கு சரியாகத்தான் தெரிகின்றது. (மண்வளமும் சரியில்லை, மனிதவளமும் சரியில்லை, அடிப்படை வளமாவது கிட்டும் என்றால் அதுவும் இப்படி) வைகையில் வாழும் ஓரளவு படித்த இளைஞர்கள் மத்தியிலும் தாங்கள் தங்கள் குடும்பத்தை நல்ல முறையில் அமைக்க வேண்டுமெனில் அதற்கு இவ்வூரை விட்டுச்சென்றால் தான் முடியும் என்ற பரவலான எண்ணம் வந்துவிட்டது.

வைகையில் ஒரு தென்னை மட்டை, பனை மட்டை கொண்டு தும்பு தயாரிக்கும் ஆலை ஒன்று தனியாரால் நிறுவப்பட்டு அதுவும் இடையிலே நிறுத்திக்கொண்டது.

அரசின் ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் தொடக்கத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரி நிகராக ரூபாய் 100.00 தந்தது. ஆனால் தற்போது ரூபாய் 70.00 மட்டுமே.

இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் சிற்சில ஆண்டுகளில் அரசின் பெருமைமிகு வரைபட ஆவணத்தில் இருந்து வைகை நிச்சமாய் காணமல் போகும் என்பதே நிதர்சமான உண்மை.

பேருந்து வரவில்லையாகிலும், சிற்றுந்து. அதுவும் இல்லையெனில் ஒரு ஷேர் ஆட்டோவாவது வரவேண்டும்.

ஊரில் ஓட்டுனர் உரிமம் பெற்று இருக்கும் ஏதேனும் ஒரு இளைஞருக்கோ அல்லது இளைஞிக்கோ அரசின் கடன் முறையில் ஒரு (ஷேர் ஆட்டோ) வாகனம் கொடுத்து அதன் மூலம் அந்த சகோதரத்திற்கும் வேலை கொடுத்தாற்போல், எங்கள் ஊருக்கும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரலாம்.

நலிந்து போன சிற்றுந்து நிறுவனத்தினரை அனுகி அவர்களுக்கு அரசின் தவணை கடன் முறையில் நிதியுதவியளித்து மீண்டும் பழையபடி இச்சாலையில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தலாம்.

அரசே தன்னுடைய பேருந்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் வைகைக்குள் சென்று வர அனுமதிக்கலாம். அதற்கு ஏற்றபடி இராமநாதபுரம்-நத்தம் வரை வரும் பேருந்தை வைகை வரை வர ஆணையிடலாம்.

இந்த நிலை அகலவேண்டுமாயின் அரசு கவனம் கொள்ள வேண்டும். அதற்கு இக்கட்டுரையை படிக்கும் சகோதரப்பெருமக்களை வேண்டிகொள்வது யாதெனில் தங்களால் எவ்வகையில் இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியுமோ அவ்வகையில் கொண்டு செல்லுமாறு தயவு செய்து கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றியுடன்

வைகைவாழ் சகோதரன்
  :salute: :salute: :salute:

(இப்பதிவானது கடந்த 2009 ஆம் ஆண்டில் யூத்புல் விகடனில் வெளியானது)

4 கருத்துகள்:

 1. ஒரு கிராமத்து இளைஞனின் சோகமும் ஏக்கமும் மனதைத் தாக்குகிறது! இதை விட வேறு யாரும் இத்தனை தெளிவாக போக்குவரத்து வசதி இல்லாத தன் கிராமத்தின் ஆதங்கத்தை வெளிப்படுத்த இயலாது. விரைவில் விடியல் வரட்டும்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைப்பூ ஆசிரியன் என்ற முறையிலே தங்களுக்கு இனிய உளமகிழ் வரவேற்பினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் சகோ.!

   தங்களின் மேலான கருத்துரைக்கும், தங்களின் வேண்டுதல்களுக்கும் என் நன்றிகள் பற்பல..   விடியும் என்ற நம்பிக்கையில் இரவின் மடியிலே.,

   நீக்கு
 2. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் சிற்சில ஆண்டுகளில் அரசின் பெருமைமிகு வரைபட ஆவணத்தில் இருந்து வைகை நிச்சமாய் காணமல் போகும் என்பதே நிதர்சமான உண்மை.

  நிலைமை சீரடைய பிரார்த்திக்கிறோம்,...
  விடியல் விரைவில் வரட்டும் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் பிராத்தனைகளுக்கு எந்தன் சார்பில் இனிய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பலமுறை போராடி விட்டுத்தான் ஊரை விட்டே வெளியுலகம் எட்டி வந்திருக்கின்றேன் (என்னைப் போன்றே பலர்).

   ஐந்து விரல்களும் ஒன்றாய் இருப்பின் எவ்வளவு இடையூறுகளை நாம் சந்திக்க நேரிடுமோ அத்தகைய இடையூறுகளை எல்லாம் சந்தித்து படிப்பினைகளையும் பெற்றேன் பலமுறை. அதே சமயத்தில் ஐந்து விரல்கள் ஒத்துழைத்தால் இன்னேரம் எல்லாம் எளிதாகவே கிட்டியிருக்கும்.

   நம்பிக்கை வரிகளுக்கு நன்றிகள் பற்பல.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...