தன்னம்பிக்கை கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தன்னம்பிக்கை கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஆகஸ்ட், 2012

உங்கள் பக்கத்தில் யார்? - அத்வைத் சதானந்த்

நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது. டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கிக்கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது. சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. 

சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது. இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர் விரும்பவில்லை.

எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் யோசியுங்கள், உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? உற்சாகமானவரா? சுறுசுறுப்பானவரா? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா? இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர். மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள். எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

லட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள். எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.


நன்றி: நமது நம்பிக்கை

சனி, 28 ஜூலை, 2012

எது உங்கள் சீட் பெல்ட் - கனகலட்சுமி


எது உங்கள் சீட் பெல்ட்
- கனகலட்சுமி
காற்றும் வெளிச்சமும்கூட புக முடியாத கடினமாக காட்டுப்பகுதியை வெகு சுலபமாக கடந்து சென்று, மிக அழகாக விளக்கி கொண்டிருந்தார் ஒரு சுற்றுலா வழிகாட்டி. இதை பார்த்து வியந்து போன ஒரு சுற்றுலாவாசி அந்த வழிகாட்டியிடம் வெறும் ஆபத்துகள் மட்டுமே நிறைந்துள்ள இந்த காட்டுப்பகுதியை முழுமையாக அறிந்து வைத்திருக்கிறீர்களே, இது எப்படி உங்களால் சாத்தியமானது என்று கேட்டார்

அதற்கு அந்த வழிகாட்டி மிக அலட்சியமாக சொன்ன பதில், ”யார் ஒருவர் அவர் கனவின் தூரத்தையும் அதை அடைவதற்கான பாதையையும் சரியாக தேர்வு செய்கிறார்களோ அவர்கள் எந்தத் துறையிலும் எளிதாக ஜெயித்து விடுவார்கள்

 அதைப் போலவே இந்தக் காட்டை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற கனவை அடைந்த நாள் முதல் அதை தெரிந்து கொள்வதற்காக அத்தனை வழிகளையும் தேடித்தேடி பயணித்தேன். அதுவே என்னை சிறப்பாக செயல்பட வைத்தது என்றார்.

அந்த வழிகாட்டி சொன்னதைப்போல் வெற்றிகளை வசப்படுத்த, நாம் உறுதியாக இருக்க வேண்டிய விஷயங்கள் இரண்டே இரண்டு. ஒன்று நாம் நம் வாழ்வில் எதை அடைய வேண்டும். மற்றொன்று, அதை நோக்கிய நம் பாதை சரியானதாக இருக்க வேண்டும்

உலகில் உள்ள மனிதர்களை மூன்று வகையாக பிரித்துவிடலாம். ஒன்று வெற்றியாளர்கள், இவர்கள் தனக்கு என்ன தேவை என்பதை முழுமையாக அறிந்தவர்கள். அவர்களின் ஆளுமையையும் ஆற்றலையும் சரியாக பயன்படுத்த தெரிந்தவர்கள்.  

இரண்டாவது ஏன் தோற்கிறோம் என்ற கேள்விகளே இன்று தோற்பவர்கள் இந்த வகையை சேர்ந்தவர்களின் அடையாளத்தை அவரை சுற்றியுள்ள சமூகம் தான் செதுக்கிக் கொண்டிருக்கும்

இந்த இரண்டையும் கடந்து மூன்றாவது வகையான மனிதர்கள் உண்டு. அவர்கள் மனம் போன போக்கில் சென்று எப்போதாவது ஒரு சில வெற்றிகளை எதிர்பாராமல் பெற்றவர்கள், ஆற்றலும், ஆளுமையும் அவர்களுக்குள் வைத்துக் கொண்டு அதை எப்படி செயல்படுத்துவது என்று தெரியாதவர்கள்

மூன்றாம் வகையை சேர்ந்தவர்கள் தோல்வியாளர்கள் அல்ல. நம்மில் பலர் இன்று இந்த மூன்றாம் வகையான ஆட்களாகத்தான் இருக்கிறார்கள்.
அவர்களுக்குத் தேவை அவர்களை சுற்றியுள்ள உறவுகள் தரும் எழுச்சி, வெற்றி முனைப்பை கூட்டும் சில நம்பிக்கை வரிகள், அவர்களின் திறனை இயக்கும் உத்வேகம், இவர்கள் முதல்வகை மனிதர்களைப்போல் தொடர் வெற்றிகளை தர தவறுவதன் காரணம், அவர்களுக்குள் ஒடுக்கப்பட்டுள்ள ஆளுமையை உணர்ந்து கொள்ளாதது கனவுகளுடன் இலக்குகளுடனும் சமரசம் கொள்வதும்தான்

எதிர்பாராமல் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ளாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முறிந்த சில உறவுகள், தொலைந்து விட்ட சில நல்ல வேலை வாய்ப்புகள், பண நெருக்கடி, திட்டமிட்ட இலக்குகள், உற்சாகம் தராத சொந்தங்கள் என ஏதோ ஒன்று அவர்கள் வெற்றியை தடுத்திருக்கக் கூடும்.

உதாரணமாக விமானத்தில் பயணிக்கும் போது முதல் அறிவிப்பே, ”ஆபத்துகள் வர வாய்ப்புள்ளது. சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள்என்பதுதான். அதுபோல் வரவிருக்கும் தோல்வியை ஆபத்தை தடுப்பதற்காக நம் கடந்த கால துயரங்களில் இருந்து துவண்டு விடாமல் நமக்குள் எழும் உத்வேகம்தான் காக்கும் கவசம்

 அதுவே இப்பொழுது நீங்கள் இருக்கும் நிலையில் இருந்து உயர நினைக்கும்போது இடையூறுகள் ஏற்பட்டாலும் பயணம் இனிமை யானதாக அமைய தெளிந்த மன நிலையுடன் நம்பிக்கை என்னும் சீல்பெல்ட் அணிந்து கொள்வோம்

நன்றி: நமது நம்பிக்கை

சனி, 21 ஜூலை, 2012

அறிய வேண்டிய ஆளுமைகள் - மரபின் மைந்தன் ம. முத்தையா

ராபின் ஷர்மா

கனடா நாட்டில் பிறந்து, உலகறிந்த தன்முன்னேற்றச் சிந்தனையாளராய், எழுத்தாளராய் விளங்குபவர் ராபின்ஷர்மா. "The Monk Who Sold His Ferrari" என்ற புத்தகம், அவர்பால் உலகின் கவனத்தை ஈர்த்தது. சின்ன வயதில் பெற்றோர்கள் சொன்ன குட்டிக்குட்டிக் கதைகள் அவருக்குள் தேடலை மலர்த்தியதாகச் சொல்கிற ராபின் ஷர்மா, வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார்.

குறுகிய காலத்தில் வளர்ந்து வளம் பெறத் தொடங்கினாலும், வாழ்வில் மனநிறைவு கிடைக்கவில்லை. ”வெளியே பார்க்காதே. உள்ளே பார்” என்று உள்ளே கேட்ட குரலை மதித்ததால் ராபின் ஷர்மா உள்ளே பார்க்கத் தொடங்கினார்.

ராபின் ஷர்மா தன் முதல் புத்தகத்தைக் கொண்டு வந்தபோது தான் உலகத்தை ஈர்க்கப் போவதாக நம்பினாரோ என்னவோ? ஆனால், அவர் சொந்தமாக அச்சடித்த 2000 பிரதிகளும், அவர் வீட்டு சமையலறையை ஆக்கிரமித்துக் கொண்டது.

சுலபத்தவணையில் இல்லாமல் சிரமத் தவணையில் மெல்லமெல்ல விற்பனையாகத் தொடங்கியது.

அதேபோல, அவர் நிகழ்த்திய முதல் பயிலரங்கில், பங்கேற்பாளர்களாக முதலில் கலந்து கொண்டவர்கள் 23 பேர்கள். அதில் 21பேர்கள், அவருடைய குடும்ப உறுப்பினர்கள்.

புதன், 28 மார்ச், 2012

பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள் - கனக லஷ்மி

திரு. லேனா தமிழ்வாணன்

நான் சென்னை தியாகராயர் நகர் ராமகிருஷ்ண பள்ளியில் படித்தேன். அப்போதே என் தந்தையின் பெயரால் அறியப்பட்டிருந்தேன். ஏறத்தாழ 1500 மாணவர்கள். என் பள்ளியில் இருந்த படிக்கட்டுகளை கடந்து தான் என்னுடைய வகுப்புக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு முறை மேலே ஏறுகிறபோதும் நான் பல வகுப்புகளை கடந்து செல்ல வேண்டியிருக்கும். அப்போ தெல்லாம் மாணவர்கள் என்னைப்பார்த்து, “இதோ இவன்தான் தமிழ்வாணனோட பையன்” என்று பேசக் கேட்டிருக்கிறேன். 

நான் பள்ளியின் தேசிய மாணவர் படையில் இருந்தபோது அதில் பங்கு பெறும் மாணவர்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக என்னைப் பார்த்து, “இவன் தமிழ்வாணன் பையன் டா” என்று கிசுகிசுப்பார்கள். இது ஒரு விதத்தில் மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் இருந்தாலும் கூட, எனக்குள் ஓர் ஏக்கமும் இருந்தது. நாம் எப்போதும் தந்தையால் தானே அறியப்படுகிறோம். நம்மால் தந்தை அறியப்பட வேண்டும் என்ற மன எழுச்சி வந்தது.

ஏற்றமிகு வாழ்வுக்கு ஏழு வழிகள்

திண்டுக்கல் – “சிகரம் உங்கள் உயரம்” தொடக்கவிழாவில்
சோம. வள்ளியப்பன் பேச்சு இந்தியா இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கும் நேரம் இது (15.3.2009). முன்பு நம்முடைய GDP 9% ஆக இருந்தது. உலகளவில் வேகமாக வளர்கிற நாடுகளில் நமக்கு இரண்டாவது இடம் என்று சந்தோஷமாக இருந்தோம். சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா. இப்போது இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 9% அல்ல 6.5, 7 சதவீதமாக குறைந்திருக்கிறது. இந்தியாவின் உற்பத்தி மட்டுமல்ல, ஏனைய வளர்ச்சிகள் குறைந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம்.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக குறைந்திருக்கிறது. 17 சதவீதம் குறைந்திருக்கிறது. 2008-09ற்கு 200 மில்லியன் டாலர் ஏற்றுமதி என்கிற இலக்கினை இந்தியப்பேரரசு முடிவு செய்திருக்கிறது. அதிலும் ஒரு சுணக்கம் வந்திருக்கிறது.

செல்கின்ற இடங்களில், ‘இந்தியாவின் வளர்ச்சி குறைந்திருக்கிறதே! பங்குச் சந்தை இறங்கியிருக்கிறதே! பல்வேறு துறைகளிலும் வியாபாரம் சுணக்கம் கண்டிருக்கிறதே! இந்நிலைமை மாறுமா? நீடிக்குமா? அவ்வளவுதானா? என்று மக்கள் கேட்கிறார்கள்.