வெள்ளி, 16 மார்ச், 2012

விட மாட்டோம் - தி மு கரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்காக, தனது சொந்தக் கட்சி அமைச்சரையே பதவி நீக்கச் சொல்கிறார், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. தமிழுக்காகவும், தமிழருக்காகவும் போராடுவதாகச் சொல்லும் தி.மு.க.,வோ, இலங்கை விவகாரத்தில் வீடியோ ஆதாரமே வெளியான பின்னும், அமைச்சர் பதவியையோ, மத்திய அரசையோ விடுவதாக இல்லை என அறிவித்துள்ளது. நாளொரு பிரச்னை; பொழுதொரு போராட்டமாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது மத்திய அரசின் நிலை. இதில், "லேட்டஸ்டாக' இரு பிரச்னைகள் எழுந்துள்ளன. ரயில் கட்டணம் உயர்த்தப்பட்ட விவகாரம், ஒன்று. இலங்கை மீதான ஐ.நா., மனித உரிமை கமிஷன் தீர்மானம், இரண்டு.


முதல் பிரச்னை, நாட்டு மக்களை பாதித்ததைவிட, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை அதிகம் பாதித்துவிட்டது. சொந்தக் கட்சி அமைச்சர் என்றும் பாராமல், "கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்; பட்ஜெட் தாக்கல் செய்த ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி ராஜினாமா செய்ய வேண்டும்' என, போர்க் குரல் எழுப்பியுள்ளார். குரல் என்றால், பிரதமருக்கு எழுதப்படும் வழக்கமான கடிதங்கள் போல் அல்ல. ஒரே வீச்சில், ஒட்டுமொத்த மத்திய அரசையும் ஆட்டுவிக்கும் குரல். இவரது எதிர்ப்பு கிளம்பிய மறுநிமிடம், ரயில்வே அமைச்சர் கோல்கட்டாவுக்கு பறக்கிறார். பிரதமர், உயர்மட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டுகிறார். திரிவேதியின் அமைச்சர் பதவி, "முடிந்து போன' விஷயமாகிவிட்டது. மறுபுறம், ஐ.நா., மனித உரிமை கமிஷனில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ள தீர்மானம். இலங்கையின் போர்க் குற்றம் பற்றி விசாரிக்க வலியுறுத்தும் இத் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும் என பெருங்குரல் எழுந்துள்ளது. எந்த உறுதியான முடிவையும் எடுக்காமல், இலங்கைக்கு வாலையும், தமிழகத்துக்கு தலையையும் காட்டி நிற்கிறது மத்திய அரசு. அவர்களுடைய இந்த இயலாமையைப் பார்த்த தி.மு.க., கொதித்து எழுந்துவிட்டது. ஜனாதிபதி முன்னரே கோஷம் போட்டது. சபாநாயகரை முற்றுகையிட்டது. கனிமொழி, திருச்சி சிவா என, கழக எம்.பி.,க் கள் வீரமுழக்கமிட்டனர்.


தி.மு.க., தலைவர் கருணாநிதியே கூட, "ஆதரவு வாபஸ் பற்றி, உயர்மட்டக் குழு முடிவெடுக்கும்' எனக் கூறிவிட்டார். இதற்கிடையில், "சேனல் 4' நேற்று வெளியிட்ட வீடியோ காட்சிகள், எரிகிற கொள்ளியில் ண்ணெய் ஊற்றியது போல், தமிழகம் எங்கும் பெரும் பரபரப்பை பற்றவைத்து விட்டது. "அவ்வளவு தான்! மத்திய அரசுக்கு நெருக்கடி முற்றிவிட்டது' என, அரசியல் வல்லுனர்கள் அத்தனை பேரும், அரசின் ஆயுட்காலத்தை எண்ண ஆரம்பித்துவிட்டனர். ஆனால், மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்படும்போதெல்லாம், ஆபத்பாந்தவனாக வந்து நிற்கும் தி.மு.க., இந்த முறையும் அந்தர் பல்டி அடித்துவிட்டது. டில்லியில் நேற்று தி.மு.க., பார்லிமென்ட் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவிடம், "இலங்கைக்கு எதிரான தீர்மான விவகாரத்தில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க., விலக்கிக் கொள்ளுமா?' என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பாலு கூறுகையில், "ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தி.மு.க., முழு ஆதரவை அளிக்கும். இந்தக் கூட்டணியின் முக்கிய அங்கமாக தி.மு.க., உள்ளது. இந்த அரசாங்கம் எவ்வளவு நாள் நீடிக்குமோ, அதுவரை நாங்களும் அங்கம் வகிப்போம்' என, ஒரே போடாகப் போட்டுவிட்டார். தி.மு.க.,வை விட ஒரே ஒரு எம்.பி., அதிகம் வைத்துள்ள திரிணமுல் காட்டும் ஆவேசம் என்ன, தி.மு.க., கடைபிடிக்கும் மென்மையான போக்கு என்ன என்பது, எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டது. டில்லியைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் ஒருவர் கூறியது போல, "இலங்கை விவகாரத்தில் தி.மு.க., கடுமையான நிலைப்பாடு எடுக்கும் என எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. சம்பவம் நடந்தபோதே விலகாதவர்கள், வீடியோ வெளியானதற்கா விலகுவர்'.


ராஜினாமாவா: செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்கிறார் கருணாநிதி: ""ஐ.நா., சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கமுடியாது எனக்கூறிவிட்ட நிலையில், மத்திய தி.மு.க., அமைச்சர்கள், எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வது குறித்து, கட்சி செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்'', என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார். சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரத்திற்காக வந்த கருணாநிதி நேற்று மாலை நெல்லையில் பேட்டியளித்தார்.* கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர்வதற்கு காரணம் போராட்டக்காரர்களா? அல்லது தமிழக அரசா?


பணம்.


* ஐ.நா.,சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடியாது எனக்கூறிவிட்ட நிலையில், அதற்காக, மத்திய தி.மு.க., அமைச்சர்கள், எம்.பி.,க்கள் ராஜினாமா செய்ய நீங்கள் வலியுறுத்துவீர்களா?


அதுகுறித்து கட்சி செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.


* தமிழகத்தில் தொடர்மின்வெட்டிற்கு முந்தைய தி.மு.க., அரசுதான் காரணம் என முதல்வர் ஜெ., குற்றம் சாட்டுகிறாரே.


முதல்வரின் பேச்சு அது. இவ்வாறு கூறினார். டெம்போ டிராவலரில் பயணம் செய்த கருணாநிதி, தேவர்குளம், வன்னிக் கோனேந்தல், குருக்கள்பட்டி உள்ளிட்ட இடங்களில் பேசுவதாக இருந்தது. ஆனால், அவர் பேசவில்லை.


- நமது சிறப்பு நிருபர் - தினமலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...