வெள்ளி, 16 மார்ச், 2012

வெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,?


இலங்கையில் 40 ஆயிரம் அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதை அறிந்த பிறகும், நாம் எப்படி வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியும்?'' என, பார்லிமென்டில் தி.மு.க., எம்.பி., கனிமொழி, ஆவேசமாக கேள்வி எழுப்பியதன் மூலம், "மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியேறப் போகிறதா?' என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கைக்கு எதிரான ஐ.நா., தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என, பார்லிமென்டில் நடந்த விவாதத்தில், கனிமொழி பேசியதாவது: இலங்கைத் தமிழர்களுக்கு நீதி வழங்கப்படும் என்றும், கொடுத்த வாக்கை அவர்கள் காப்பாற்றிவிடுவர் என்றும், இலங்கை அரசு மீது, வெளியுறவு அமைச்சர் நிறைய நம்பிக்கை வைத்திருப்பது, அவரது அறிக்கையிலிருந்து தெரிகிறது. ஆனால், எதன் அடிப்படையில் கிருஷ்ணாவுக்கு இந்த நம்பிக்கையும், உறுதியும் வந்தது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், மூன்று ஆண்டுகளுக்கு முன், இலங்கை பிரதமர் இங்கு வந்த போது, அங்குள்ள தமிழர்களுக்கு, 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என, வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அறிக்கையில், 300 வீடுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், அங்குள்ள தமிழர்களுக்காக, 50 வீடுகளாவது கட்டித் தரப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.


கிருஷ்ணா இலங்கை சென்று திரும்பியபோது, "30வது சீர்திருத்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசு செயல்படும்' என, பத்திரிகையாளர்களிடம் கூறினார். அடுத்த சில நாட்களிலேயே இலங்கை பிரதமர், "அது நடக்காது' என, மறுத்து விட்டார். "இந்தியாவுக்கு அப்படி எந்த வாக்குறுதியும் தரப்படவில்லை' எனக் கூறிவிட்டார்.


நமது வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, இலங்கை பிரதமர் அளித்த வாக்குறுதியை அவரே மீறும்போது, அந்நாட்டு அரசு நியாயமாக நடந்து கொள்ளும் என நாம் எப்படி எதிர்பார்ப்பது? அவர்களுடைய வார்த்தைகளிலோ, இலங்கைத் தமிழர் வாழ்க்கையிலோ நீதி பிறக்கும் என எப்படி நம்ப முடியும்? மேலும், "இலங்கையில் ஏற்கனவே விசாரணை நடந்து கொண்டிருக்கிறது; அதன் இறுதியில் நீதி கிடைக்கும்' என நம்புவதாக அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் நாட்டு விசாரணை அறிக்கை, அங்கு எந்த போர்க் குற்றமும் நடக்கவில்லை என அறிவித்துவிட்டது.


அந்த அறிக்கையில், "குழந்தைகள், பெண்கள் உட்பட, 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், இலங்கை அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை' எனக் கூறப்பட்டுள்ளது. இருந்தும், எப்படி இலங்கையை மத்திய அரசு நம்புகிறது எனத் தெரியவில்லை. வழக்கமாக நாம் அண்டை நாட்டுப் பிரச்னைகளில் தலையிடுவதில்லை என பேசுகிறோம். ஆனால், 1971ம் ஆண்டு வங்கதேசப் போரில் நமது பங்களிப்பு பற்றி நாம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகமும் அறியும்.


காசாவில் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள் பற்றி, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் 2009ல் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. அதை, தென் ஆப்ரிக்காவுக்கு நமது பிரதமர் சென்றிருந்தபோது, ரொம்பப் பெருமையாகக் குறிப்பிட்டார். ஆனால், இலங்கைத் தமிழர்கள் என வரும் போது, தென் மாநில மற்றும் தமிழக மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயம் என வரும்போது மட்டும் ஏன் விலகி நிற்க வேண்டும்? நாங்கள், அதிகப்படியாக எதையும் கேட்கவில்லை. இலங்கையில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மீதான விசாரணையை இந்தியா ஆதரிக்குமா என்பதை மட்டுமே அறிய விரும்புகிறோம். உலகத்தில் உள்ள யாருமே, அப்படி ஒன்று நடக்கவில்லை எனக் கூற முடியாது. 40 ஆயிரம் மக்கள் காணவில்லை; 40 ஆயிரம் மக்களின் உயிர் போய்விட்டது அல்லது எடுக்கப்பட்டுள்ளது.


இதன் பிறகும் நாம் எப்படி வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியும்? எல்லாரும், தமிழ் உணர்வு, தமிழ் உணர்வு என்கின்றனர். இது, தமிழ் உணர்வு இல்லை. இது மனித உரிமை மீறல் விவகாரம். தமிழகம், இன்னமும் இந்தியாவின் ஓர் அங்கம் தான் என நம்புகிறோம். இந்தப் பிரச்னையை எழுப்பும் போதெல்லாம், என்னவோ பிரிவினைவாதிகள் போல எங்களைப் பற்றி பேசுகின்றனர். இது தமிழர்களின் பிரச்னை இல்லை. இது, இந்தியா கவனிக்க வேண்டிய பிரச்னை; மனித உரிமை பிரச்னை. இதை உலகம் உணர்ந்திருக்கிறது. இந்திய அரசும் இதை உணர்ந்து, செயல்பட வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.


"தமிழகம், இந்தியாவின் அங்கம் தானா' என்ற அளவுக்கு ஆவேசமாக கனிமொழி பேசியிருப்பது, கட்சித் தலைமையின் ஒப்புதல் பெற்றே நடந்திருக்க வேண்டும். எனவே, பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் மீது கோபத்தில் இருக்கும் தி.மு.க., தலைமை, இலங்கை விவகாரத்தைப் பயன்படுத்தி, ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெறும் அல்லது அமைச்சரவையிலிருந்து வெளியேறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...