வெள்ளி, 16 மார்ச், 2012

ஏழுமலையானுக்கு ஏக்கம்..

ஊரோரம் கம்மாய்க்கரை
ஊளையிடும் நரிக்கூட்டமாங்கே

பத்துப்பதினைந்து வருசமாய்
பலனீந்த பனையொன்று பட்டுவிட
ஏழுமலையானுக்கு எல்லையிலா வருத்தம்

பதமாய் நீரும் பாய்க்கோலையும்
இதமாய் குளிரிள நுங்கும், பழமும்
கனமாய் மட்டையும் தந்து என்னை
நீ ஈர்த்தாயே ஆனால் இன்று
என்முன்னே நீர்த்து விட்டாயே!

ஏக்கமும், துக்கமும் கொண்டே
ஏழுமலையானுக்கு எரிந்தது நெஞ்சம்
கல்லடி பட்டாலும் படலாம் பாவிகள்
சொல்லடி படவே கூடாது யம்மையே!

காடுவெட்டப்போன கருப்பன் கருகுனானோ
மாடு மேய்க்கப்போன மாடன் மலைச்சானோ
புல்லருக்க வந்த பொண்ணுத்தாயீ பொருமினாளோ.
புரியலயே எனக்கு, புலம்பலே என் மனதுக்கு

சோடியாய் நின்ற நினக்கு
சோடையாகி விட்டதே! பாவிகள்
பச்சக்குருத்தை படியோடு வெட்டியவன் எவனோ?....

ஏழுமலையானின் ஏக்கம் தீர
ஏதுவாய் நடந்தது ஆங்கே
மரங்கொத்திப்பறவைகள்,
மகுடமாய் பனையை குடைய....

பலபொழுது கழித்த ஒரு பொழுதில்
ஏழுமலையான் எழுந்திருந்த வேளையிலே
பட்ட பனையைநாடி அதன் துணையைத்தேடி...

கண்ட பனையில் கலகலப்பாய் புள்ளினங்கள்
காட்டுக்கொரு வீடுகட்டி
நாட்டுக்கொரு எல்லை போல
வீட்டுக்கொருவர் விளக்காய் வழியிலிருக்க
ஏழுமலையானின் ஏக்கம் எம்பி ஓடியது.

வண்ணவண்ண புள்ளினங்களின் புதுமனைக்கு
வரிசையாய் பெயர் வைத்தான் ஏழுமலை
நல்லதொரு கிளிப்பொந்திற்கு
நலம்நாடி என்றே பெயரிட்டான்

காலையில் வரகும் கடுத்து நீரும்
மாலையில் சாமையும்
மகிழ்வாய் ஈன்றான் அவைகளுக்கு

நாளெல்லாம் மகிழ்வே நலமுடன் கழியவே
வேட்டுவைக்க ஆங்கே வேடன் வடிவில் வந்ததே

பச்சைக்கிளிப்பிள்ளை வேண்டும் பாடுவதற்கு என்னோடு
நித்தம் விளையாட நீ பிடித்து தா அப்பா
கேட்ட புதல்வனுக்காய்
கிடுக்கென்று மரத்திலேறி
சின்னகிளிப்பொந்தை
சின்னாபின்னாமாக்கினான் வேடன்

சிதைந்தது கிளியின் மனை
விளைந்தது ஒரு பாவ வினை
கொத்தாய் குஞ்சுகளை அள்ளி
குதூகலமாய் மடியிலிட்டான்
இட்ட மடியிலே இடறி விழுந்தன சிலவே

அந்த உச்சியிலிருந்து அடியிலே விழ
எழும்ப இயலா அரும்பிறக்கை
குஞ்சுகள் இறந்தனவே
கிட்டிய குஞ்சுகளோடே
கிரகத்தைக்கூட்டிக்கொண்டு
எட்டி இல்லம் சென்றான்
நரகம் புகப்போகும் வேடன்

மாலையிலே சாமை வைக்க
மகிழ்வோடு வந்தான் ஏழுமலை
காண வந்த ஏழுமலைக்கு
கண்ணில் இருந்து வீழருவி
தாளா துக்கத்தை
தனியாக அழுதே தீர்த்தான்

தஞ்சம் புகுந்த பச்சைக்கிளி
தன் பிஞ்சை இழந்தது எண்ணியழ
நாணிப்போன ஏழுமலையான்
எறும்பு மொய்த்த குஞ்சுகளை
எடுத்துவைத்து அழுதான்

என்னருமை மானிடமே
ஏனிப்படி வெறிச்செயலோ
அடுத்தவன் உயிர்வலியில்
ஆனந்தம் காண்பதை நிறுத்துவீரே..


நன்றி

:salute: :salute: :salute:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...