உயிரோவியம் ~ சிவஹரி
வசந்தன் இன்று நல்ல நிலைமையில் இருக்கின்றான் என்றால் அதற்கு வடிவு செய்த தியாகமே காரணம் என்று ஊரார் அரசல் புரசலாகப் பேசிக் கொண்டார்கள். ஆனால் தான் எதுவுமே செய்யவில்லை என்றும் “பெற்றால் தான் தன் பிள்ளையா? ” என்று மறுமொழி சொல்லிக் கொண்டும் சிரித்துக் கொண்டே சென்று விடுவார் வடிவாகிய வடிவுக்கரசியாக அம்மாள்.
வசந்தனின் தாயார் கமலாம்பாள் கொள்ளை அழகும், குறிப்பறிந்து நடக்கும் குணமும், ஈகை செரிந்த கையினையும் தன்னகத்தே கொண்டவர். இல்லையென வந்தோர்க்கு 'இது போதுமே' என்று சொல்லும் அளவிற்கு தன் சக்திக்கு அப்பாற்பட்டும் செய்ய முற்படுவர். தனது பள்ளிப்பருவத்திலிருந்தே அவருக்கு இந்த நற்சிந்தனை ஆசிரியர்களின் மூலமாக அவர் மனதில் வித்திடப்பட்டது.
கமலாம்பாளின் பெற்றோரும் செல்வச் செழிப்பு நிறைந்தவர்கள். அவர்களின் சொத்துக்களில் எல்லாம் வியர்வை சிந்திய தொழிலாளர்களின் புன்னகையும், மகிழ்ச்சியுமே கண்ணாடிப் பிம்பங்களாகப் பிரதிபலிக்கும். பெற்றோருக்கு ஏற்ற மகளாய் அதுவும் ஒற்றைத் தன்னிறைச் செல்வியாய் கமலாம்பாள் பிறந்து வளர்ந்து வந்தார்.
அகவை பதினைந்தை எட்டும் வேளையிலே பள்ளிப் படிப்பை நிறுத்தி விட பெற்றோர் முடிவு செய்தனர். பள்ளி ஆசிரியர்கள் எவ்வளவோ மன்றாடிக் கேட்டுக் கொண்டும் “ பொட்டப் புள்ள படிச்சு வேலைக்குப் போய் சம்பாதிச்சு தான் நாங்க சாப்புடணுமா” என்று அங்கே நாப்பிறழும் வகையிலே நாராயணின் விதி நாடகமாடி விட்டது.
தாயை சிறு வயதிலே இழந்து நின்றாலும் தாய்க்குத்தாயாய், தந்தைக்குத் தந்தையாய் நிற்கும் தனது அப்பா எது செய்தாலும் அது தனது நன்மைக்கே என்று எண்ணிக் கொள்ளும் கமலாம்பாளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு சிறு வயதிலேயே திருமணத்தை அவரின் பெற்றோர் கட்டாயத்தின் பேரில் மேலக்குறிச்சி ஜமீன்தார் ராமசாமிக்கு முடித்து வைத்தனர்.
ஜமீன்தார் ராமசாமியோ வேலைக்காரர்களின் அழுகையிலும், மனக்குமுறலிலும் சொத்து சேர்த்தவர். அத்தோடன்றி வெளிநாட்டுக்கு மரங்களை கள்ளச் சந்தையில் ஏற்றுமதி செய்து சொத்துச் சேர்த்தார்.
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது பழமொழி! ஆனால் ராமசாமி எல்லாமே ஐந்தே ஐந்து நாள் தான்.
பணத்தாசை என்னும் பேயின் மடியில் சிக்கிக் கொண்ட ராமசாமிக்கு தன் மனைவியின் அழகையோ அறிவையோ குணத்தையோ ரசிக்க நேரமில்லை. வியாபாரம் வியாபாரம் என்று முழு மூச்சாய் பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிப்பது குறித்தே நினைவலைகளை மாற்றி மாற்றிக் கொண்டே இருந்தார்.
கமலாம்பாள் தன் குடும்ப வாழ்க்கை நன்றாகவே நடந்து கொண்டிருக்கின்றது என்று வெளியிலேயும் பெற்றோருக்கும் தெரியும்படி அழகாய் வாழ்க்கையினை நடத்திக் கொண்டிருந்தார். இல்லையென்று வருவோர்க்கு இயன்ற வரை கொடுக்க தன் சேமிப்பையும், தந்தை இறப்பிற்குப் பின் தந்தை வழியாய் தனக்குக் கிடைத்த சொத்தினையும் ஈந்து கொண்டிருந்தார்.
கைக்கு வந்த சொத்துக்கள் எல்லாம் இப்படி தர்மசாலையில் இருந்து வெளிப்பட்ட பொரி உருண்டை போல இருக்கும் இடம் தெரியாமல் போகுதே என்ற ஆவேசத்திலும், அற்ப ஆசையிலும் "யாருக்கும் என்னைக் கேட்காமல் ஒரு சல்லிக் காசு கூட கொடுக்கக் கூடாது” என்றும் கமலாம்பாளின் சொத்துக்களையும் எழுதி வாங்கிக் கொண்டார் ராமசாமி.
நாட்கள் மாதங்களாக ஓடியது. மாதங்களும் ஆண்டுகளாக நகர்ந்து சென்றது. ஏதேனும் விசேசம் உண்டா என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருந்தார் கமலாம்பாள்.
ஐந்தே ஐந்து நாள் மட்டும் மனைவியென்னும் மகத்தான உறவை ரசித்த ராமசாமிக்கு மன ஓய்வு மட்டுமல்ல உடலுக்கும் ஒய்வும், உற்சாகமும் தரும் ஒரு இயந்திரமாக அவ்வப்போது கமலாம்பாள் தெரிந்தார்.
அது இறைவனின் கொடையே என்று அகமகிழ்வினைக் கூட்டிட அழகான கருவொன்று கமலாம்பாளின் வயிற்றில் குடி கொண்டது.!
ஒரு நாள் கரு உருவாகி கனிந்து வரும் வேளையிலே காலச்சனியென உள்ளே வந்தான் ஜோசியனொருவன்.
“ உங்க ரெண்டு பேரு ராசியினையும், நட்சத்திரத்தினையும், இன்ன பிற கணக்குகளையும் வைத்துக் கணிக்கும் போது பெண் குழந்தை தான்” என்று அடித்துச் சொல்லி ராமசாமியின் நெஞ்சில் இடியைப் பாய்ச்சி விட்டான்.
பெண் குழந்தை பிறந்தால் தனது சொத்தினை முழுசாக அடுத்தவனுக்கு கொடுக்க வேண்டுமே.! “பொட்டப் புள்ள பொறந்த செலவு அதிகமா இருக்குமே” என்ற எண்ணமே அவரிடத்தில் அதிமாய் உலவிச் சென்றது.
குழம்பிக் கொண்டு யோசித்தால் கொடூர எண்ணமே மேல் வந்து நிற்கும் என்பது போல ராமசாமிக்கும் ஒரு எண்ணம் உதித்தது. அதன் விளைவாய் கமலாம்பாளை தன் புதிதாக வாங்கிட பண்ணை வீட்டில் ஒரு ஓட்டு வீடு போட்டு அங்கே தங்க வைப்பது என்றும், பிறக்கும் குழந்தை பெண் குழந்தை என்று ஜோசியன் சொன்ன முடிவான வாக்கினைக் கொண்டும் கமலாம்பாளை சரியாகக் கவனிக்காமல் மாட்டுத் தொழுவத்தினை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வது முதல் மாடுகளுக்கு தீனி வைப்பது வரை எல்லா வேளைகளையும் செய்யச் சொல்லி துன்புறுத்தினார் ராமசாமி. ஒத்தாசையாக வடிவுக்கரசி என்ற அந்த கிராமத்தில் இருந்த ஒரு பெண்ணையும் குறைவான சம்பளத்தில் வேலைக்கு வைத்தார்.
ஆனால் கமலாம்பாளோ தன் கணவன் எது செய்தாலும் தன் நன்மைக்கே என்று எண்ணிக் கொண்டே வாழ்க்கையினை நடத்திச் சென்றார். மனம் தான் என்றுமே இருப்புக் கொள்ளாதே! நடந்த சம்பவங்களை மேலோட்டமாக வடிவிடம் ஒரு நாள் இரவில் நிலவொளியில் காய்ந்தபடி வீட்டு முற்றத்தில் அந்திப் பொழுது தெளித்த நீரின் மணத்தினை உள்வாங்கிக் கொண்டே கூறினார். ஆரம்ப காலத்தில் வாரம் இரு முறை வந்து பார்த்துச் சென்ற ராமசாமி போகப் போக மாதம் ஒரு முறை மட்டுமே வந்தார். கடைசியாக அந்த வரத்தும் வைகைத்தண்ணீர் வராத ராமநாதபுரம் போல காய்ந்து விட்டது.
கமலாம்பாளுக்கு மனதில் இப்போது பயம் குடி கொண்டு விட்டது. எங்கே தனக்குப் பெண் குழந்தை பிறந்தால் தன்னையும், தன் குழந்தையும் அழித்து விடுவாரோ என்று தாய்மை யோசிக்க ஆரம்பித்து விட்டது. தனக்கு எது நேர்ந்தாலும் கவலையில்லை. ஆனால் தன் குழந்தைக்கு எதுவுமே நேரக்கூடாது என்று வேண்டாத தெய்வமில்லாமல் எல்லாச் சாமியின் பெயரையும் தினமும் சொல்லிப் புலம்பினார்.
பண்ணையில் இருந்த மாடுகளும் எண்ணிக்கையில் ஒவ்வொன்றாய் குறைய ஆரம்பித்தது. மாடுகளைப் பிடிக்க வந்த ஆட்களிடம் கேட்கும் போது “ ஐயா, மாட்டை விற்று விட்டார்” என்று சொல்லிப் பிடித்துச் சென்றனர். வருமானத்திற்கும் வழியில்லை. எப்போதாவது கொடுக்கும் பணத்திற்காக வடிவு சென்று பலமுறை இரந்து நின்று வாங்கி வருவார்.
மாதம் எட்டைத் தொடும் வேளையிலே வடிவினைக் கூப்பிட்டு கமலாம்பாள், ”முதலாளியிடம் சொல்லி விட்டு இன்றுடன் நீ வேலையினை விட்டு நின்று கொள், நானே சமாளித்துக்கொள்கிறேன், அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் நீ வந்து பார்த்துக்கொண்டாலே போதும். இனிமேலும் எனக்கு என் பிள்ளையினைக் காப்பேன் என்று நம்பிக்கையில்லை. ஆகவே எந்தக் குழந்தை பிறந்தாலும் அதனை என் கணவரிடம் காட்ட வேண்டாம்; சொல்லவும் வேண்டாம். அதனை நீயே வளர்த்து ஆளாக்கி விடு. என் தந்தை எனக்காக விட்டுச் சென்றது என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதுவுமே இல்லையென்றாலும் மக்களிடம் நல்ல இரக்க மனமுடையவர் என்ற பெயர் மட்டுமே எங்களுக்கு மிஞ்சி இருக்கின்றது. அதே பெயரினை நீ என் பிள்ளையும் எடுக்கும்படி மட்டும் வளர்த்து விடு" என்று அழுது புலம்பி கேட்டுக் கொண்டார்.
வடிவுக்கரசியின் குடும்பம் ஊர் விட்டு ஊர் வந்து ஒரு வாய்க்கஞ்சிக்கூட வழியின்றி கையேந்திய நிலையில் கமலாம்பாள் என்றோ செய்த சிற்றுதவியால் வடிவுக்கரசியின் குடும்பம் இன்று தலை தூக்கி நிற்கின்றது. தன் குடும்பத்தினை ஆதரித்தவர் இன்று நம்மிடமே பிச்சை கேட்பது போல நிற்பதைக் கண்ட வடிவுக்கரசிக்கு நெஞ்சில் யாரோ உலக்கை கொண்டு இடித்த்து போல் உணர்ந்தார்.
“அம்மா, இன்று நாங்கள் இருக்கின்றோம் என்றால் அது அன்று நீங்கள் போட்ட பிச்சை தான்.! உங்கள் சொற்படியே நான் நடந்து கொள்வேன்” என்று வடிவு வாக்களித்தார்.
மாதம் உருண்டோடியது, அழகான ஆண்மகவினை பெற்றெடுத்தார் தாய் கமலாம்பாள். இனியாவது எங்கள் தலைமுறையில் தொடர்ந்து வசந்தம் வீசட்டும் என்றே வசந்தன் என்று பெயர் சூட்டி வடிவின் கையில் கர்ணன் கொண்ட தான தர்மத்தின் பலனை கண்ணனிடம் கொடுத்து போல ஈந்தார்.
சரியாக கவனிக்காமல் குடற் பகுதியில் சீழ் ஏற்பட்டு பரிதாபமாக கமலாம்பாள் இறைவனடி சேர்ந்து விட்டார். பெண் குழந்தை இறந்தே பிறந்தது என்று கமலாம்பாளின் பொய்யான தகவலையும், கமலாம்பாள் இறந்த தகவலையும் ராமசாமிக்குத் தெரிவித்தும் அவர் வந்து பார்க்க மனமின்றி 'வேலையாட்களிடம் காசு கொடுத்து அடக்கம் செய்யச் சொன்னார்'.
இது ஒருபுறமிருக்க கையில் இருந்த சொத்துக்களை எல்லாம் பணமாக மாற்றி அதனை மரக்கடத்தலில் முதலீடு செய்ய நண்பர்களோடு கூட்டு உடன்படிக்கையில் கையொப்பம் இட்டு அதனை செயல்முறைப் படுத்த கூட்டாக ஆயத்தமானார்கள் ராமசாமி நண்பர்கள் குழாம். அவ்வுடன்படிக்கையின்படி முதலீட்டிற்குண்டான பணம் முழுமையும் ராமசாமியைச் சார்ந்தது. சரியான இடத்திற்கு சென்று சேர்ப்பது மட்டும் நண்பர்களுக்குண்டான பொறுப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முதலிரு பரிமாற்றங்கள் சுமூகமாக நடந்தது. ஆனால் அடுத்தடுத்த பரிமாற்றங்களில் பணம் கொடுக்கவில்லை, கஸ்டம்ஸிடம் மாட்டிக் கொண்டோம் என்று பல்வேறு காரணங்களை மாலையாகத் தொடுத்து ராமசாமியில் காதில் சுற்ற ஆரம்பித்து விட்டனர். நிலைமை போகப் போக உடன்படிக்கையினை முறித்துக் கொண்டு தானே களம் இறங்குவதாய் ராமசாமி இறங்கினார்.
ஒரு மாத்தில் பல கோடிகளைக் கண்ட நண்பர்களின் கை சும்மாயிருக்குமா என்ன! எப்படியாவது ராமசாமியினைக் காலி செய்ய வேண்டும் என்று வலிமையான திட்டம் தீட்டி வாகன விபத்தில் இறந்து விட்டதாய் முடித்து விட்டனர். அவரும் சாப்பிடாமல் அடுத்தவருக்கும் கொடுக்காமல் அப்படியே மாண்டு விட்டது.
காலங்கள் இப்போது விரைந்தோடின.. வடிவுக்கரசியோ தனக்கு திருமணமே வேண்டாம் என்று தீர்மானித்து வசந்தனை நல்ல நிலைக்கு கொண்டு வர முழுமூச்சாய்ப் பாடுபட்டார். குறிப்பறிந்து கொடுக்கும் ஈகைக்குணத்தினை வசந்தனுக்கு கற்றுக் கொடுக்க அவர் எள்ளளவும் தவறவில்லை. படித்து நல்ல நிலைக்கு வந்த வசந்தன் கிராமங்களில் இருக்கும் மகளிர்குழு உருவாக்கிடும் கைவினைப் பொருட்களையும் மரச்சாமன்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலைத் தொடங்கினான். நல்ல முன்னேற்றம். ஆணவம் இல்லாத அடக்க குணம். அடுத்தவருக்கு உதவும் மனம் என எல்லாம் அவனை மென்மேலும் உயர்த்தியது. நகரத்தில் அவன் செல்வாக்கு உயர்ந்தது.
தனக்கு பின்புலமாய் நின்ற தாய் வடிவுக்கரசியினை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான். அவரை நகரத்தில் வந்து தங்கும்படி பலமுறை கேட்டுக் கொண்டான். வழக்கம் போல ஒருநாள் ஊருக்கு வந்திருக்கும் போது தான் ஊர்க்காரர்களின் புகழாரப் பேச்சினையும் அவன் செவிமெடுக்க நேர்ந்தது. அகம் மகிழ்ந்தே “அம்மா, என்னுடன் வந்து விடுங்களேன்” என்று கேட்டதற்கு வடிவுக்கரசியம்மாள் ”இந்த ஓட்டு வீடு எனது தெய்வம் குடியிருந்த கோவில், இந்த ஓட்டு வீட்டினை விட்டு வேறு எங்கும் உயிர் இருக்கும் வரை செல்லப் போவதில்லை" என்று கட்டாயமாக மறுத்தார் வடிவுக்கரசி.
தன் பிறப்பின் ரகசியம் அறியாத வசந்தன் எதுவுமே சொல்ல முடியாமல் நின்று கொண்டிருந்தான். அப்போது தான் வடிவுக்கரசியம்மாள் தன் இரும்புப் பெட்டியில் இத்தனை நாளும் பாதுகாப்பாய் வைத்திருந்த தன் எஜமானியின் உயிரோவியத்தை எடுத்துக் காட்டி ஓட்டு வீட்டின் உயிர்ப்புத் தன்மையினை வசந்தனுக்கு உணர்த்தினார்.
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக