திங்கள், 19 மார்ச், 2012

மாடசாமியின் மகத்தான சாதனை

மாடசாமியின் மகத்தான சாதனை

அது ஒரு அழகான கிராமம். ஆனை அம்பாரி என ஆண்ட பூமி.. காலத்தின் கோலத்தால் கட்டாற்று வெள்ளம் கரை புரண்டோடி கழனியை அழித்தது போல நல்லா இருந்த குடும்பங்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில் துயர சம்பவங்கள் நிழந்து விட ஊரில் பேயும், பிசாசும் குடியிருக்கின்றதென்று பலர் பயந்து கொண்டு கைக்கு வந்த விலைக்கு அந்த ஊரில் இருந்த நிலக்கிழாரும் , புதிதாக வீட்டு மனை விற்பனையில் இறங்கியிருக்கும் முனிசாமியிடம் கொடுத்து விட்டு, அதிலிருந்து கிடைத்த காசைக் கொண்டு பட்டணத்தில் வாழலாம் என்று எண்ணி பலர் பட்டணம் நோக்கிச் சென்று விட்டனர்.

அந்தக் கிராமத்தில் மாடசாமி ஒரு நிலக்கிழார் வாழ்ந்து வந்தார். அவர் எதையும் சீர்தூக்கிப் பார்த்து செயல் படுத்தும் ஆன்மீக வாதி!. மக்கள் எதனால் கிராமத்தை விட்டு வெளியேறுகின்றார்கள் என்று புரியாமலே காலத்தை கடத்திக் கொண்டிருந்தார்.

மாடசாமிக்கு பொன்னுத்தாய் என்ற அன்பான மனைவியும் அழகன், குணவன் என்று இரண்டு மகன்களும் , வள்ளி என்ற ஒரு மகளுமாக மொத்தம் ஐந்து பேர். மாடசாமியின் நிலத்தில் வேலை பார்க்க ஆட்கள் உள்ளுரிலிருந்தே வந்து கொண்டிருந்தனர். அதனால் அவர் தன் மகன்களை அழைத்து விவசாயம் பற்றியும், தரமான விளைச்சலை எப்படி பெருக்குவது என்பது குறித்தும் சொல்லிக் கொடுத்திருந்தார். மகன்களும் விவசாயம் பற்றி கொஞ்சம் படித்திருந்தாலும் விவசாயம் செய்வது தங்கள் மூதாதையர் வழி வழியாக மகிழ்வோடு செய்து வருவதால் அந்த வேலையிலே மும்முரமாக இறங்கி விட்டார்கள்.

ஒரு நாள் ஊருக்கு கார் ஒன்று வந்தது. அதில் முனிசாமியும் வந்திறங்கினான். முனிசாமி பட்டணத்தில் இருந்து சில பணக்காரர்களைக் கூட்டிக் கொண்டு வந்திருந்தான். தன் கைவசம் உள்ள நிலத்தை சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தான். ஊருக்குள் புதிதாய் வந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களை யார் என்று முனிசாமியிடம் மாடசாமி கேட்ட பொழுது முனிசாமி தலையில் இடி இறங்கும் விசயத்தை சொல்லி முடித்தான்.

அதாவது தன் நிலத்தையெல்லாம் பட்டணத்தில் இருந்து வந்திருக்கும் இந்த பணக்காரர்களுக்கு கொடுத்து அவர்கள் தொடங்க விருக்கும் தொழிற்சாலையில் அவர்களுடன் பங்குதாரராக இருக்கப் போவதாக தெரிவித்தான்.

இதனைக் கேட்ட மாடசாமிக்கு கோபம் வந்தது, ஆனால் வெளிக் காட்டிக் கொள்ளாமல் முனிசாமியிடம் இதனை செய்ய வேண்டாம் என்றும் இதனால் ஊருக்குள் மக்களுக்கு பல தீங்குகள் விளையலாம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.

முனிசாமியோ இதனை சரியாக காது கொடுத்து கேளாமல் தான் எடுத்த முடிவை மாற்ற மாட்டேன் என்றும் தன் இடம் தானே முடிவு செய்வேன் என்றும், யாரும் தனக்கு சொல்ல வேண்டாம் என்று ஆத்திரமாக பேசினான்.

கையில் நிலம் இருந்தவர்களே விற்று விட்டு பட்டணம் சென்றாலும் அடித்தட்டு மக்கள் எங்கும் போக வழியில்லாத காரணத்தால் அந்த ஊரிலே பயந்து கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஊரில் மக்கள் இங்கே பார்த்தேன் பேயை; அங்கே பார்த்தேன் பிசாசை , கருப்பாய் வந்தது, மாடு மாதிரி ஓடிச் சென்றது என்று கூட்டம் போட்டு பேசிக் கொண்டிருந்தனர். எங்கு சென்றாலும் கூட்டம் கூட்டமாகவே சென்று வந்தனர். வயல் வேலைக்கு சென்று கொண்டிருந்தாலும் பயந்து பயந்தே காலம் கழித்துக் கொண்டிருந்தனர்.

இதனால் மாடசாமியின் வயல் வேலைக்கு ஆட்கள் வரத்தில் மந்தம் ஏற்பட்டு விட்டது. களை எடுக்கும் பருவத்தில் நின்ற நெற் பயிர்களும், தண்ணீர் பாய்ச்ச வேண்டிய சூழ்நிலையில் இருந்த மிளகாய் செடிகளும் ஆட்களுக்காய் ஏங்கி நின்றன.

பகலென்றும், இரவென்றும் பார்க்காமல் மாடசாமியின் குடும்பமே வயற்காட்டில் தான் கிடந்தது. சரியான நேரத்தில் சாப்பிடாமல் கூட வயல் வேலையிலேயே மும்முரமாக செய்து கொண்டிருந்தனர்.

கூலி ஆட்களை நாடிச் சென்ற அழகன் ஒவ்வொரு முறையும் ஒருவர் இருவர் என குறைந்த எண்ணிக்கையிலேயே வேலைக்கு ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்தான். இதுக்கு மேலே ஆட்கள் வர மறுக்கின்றார்கள் என்று தன் தந்தையிடம் வருத்தத்துடன் தெரிவித்தான்.

ஆட்கள் வேலைக்கு வர மறுக்கின்ற என்ன காரணம் என்று மீண்டும் ஆழமாக சிந்திக்க ஆரம்பித்தார் மாடசாமி. முனிசாமியிடம் பேசிய போது அவன் பேசிய விதம், அவன் நடந்து கொண்ட தன்மை என்றெல்லாத்தையும் மீண்டும் தன் வீட்டில் உள்ள கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு அசைபோட ஆரம்பித்தார்.


தான் யோசனையின் விளைவாக ஒரு புதிய தீர்வைக் கண்டு பிடித்தார். அதன் படி தன் வயலில் வேலை பார்த்து விட்டு வரும் போது ஒரு தங்கச் சங்கிலி ஒன்று வழியில் கிடந்ததாகவும் சொன்னார். அது யாருடையது என்று தெரியவில்லை என்றும் அதனை சரியான அடையாளம் சொல்லி பொருளைத் தவற விட்டவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னார். பேய் பிசாசைப் பற்றி பேசிக்கொண்டிருந்த மக்கள் இப்போது தங்கச்சங்கிலி பற்றி கூட்டம் கூட்டமாக பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு நாள் முனிசாமி குடித்து விட்டு ஊரில் இருந்த மற்றவருடன் பேசிக் கொண்டிருந்த போது தானும் பட்டணத்துப் பணக்காரர்களும் திட்டமிட்டு தான் ஊரில் சில சம்பவங்களை நிகழ்த்தியதாகவும் விவசாயத்தை விட பிற தொழில்களில் தான் முதலீட்டைப் போட்டு பணம் பெருக்கப் போவதாகவும் உளறி விடவே, அந்த வழியாக போய்க் கொண்டிருந்த குணவன் காதில் தெளிவாகப் பட்டது. உடனே ஊர் மக்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் ஒரு மரத்தடியில் கூடினர்.

ஊரில் இருந்த மற்ற முக்கியமானவர்கள் முனிசாமியிடம் விசாரணை நடத்த ஆரம்பித்தார்கள். முடிவில் தன் செய்த தவறை வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ள வேண்டியாதாகிப் போகவே ஊர் மக்கள் அனைவரும் முனிசாமியை ஊரை விட்டுத்துரத்த வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்தனர்.

அப்போது ஊர் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த மாடசாமி எழுந்து பேச ஆரம்பித்தார்.

முனிசாமியின் செயலுக்கு ஊர் சபை தண்டனை கொடுத்தாலும் அவனை மன்னித்து விடுமாறு இந்த ஊர் சபையைக் கேட்டுக் கொள்கின்றேன். விவசாயம் ஒன்னும் கேவலமான தொழில் அல்ல. முனிசாமியின் தந்தையும் மிகப் பெரிய விவசாயியே ; முனிசாமியும் ஒரு சிறந்த விவசாயியே ; ஒரு விவசாயி என்பவன் எவ்வளவு உயர்வான மனிதன் தெரியுமா. கடவுளுக்கு ஒப்பானவன். எத்தனையோ உயிர்களின் பசியை தீர்க்கும் அட்சய பாத்திரம்.; விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும்.

அத்தன்மை பொருந்திய விவசாயத்தை நாம் தொடர்ந்து பரம்பரையாக செய்து வரல் வேண்டும். பட்டினத்தில் இருந்து வந்தவர்களால் தான் முனிசாமிக்கு மனம் மாறி விட்டது என்று நான் நினைக்கின்றேன். அவர்கள் தொழிற்சாலை கட்ட விவசாய நிலத்தை கேட்காமல் வேறு தரிசான நிலத்தை மக்களுக்கு தீங்கு விளைக்கா வண்ணம் இருக்கும் இடத்தினை தேர்வு செய்து கொள்ளலாமே!!

முனிசாமி தான் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்று முடிவை முனிசாமியின் மீது திணித்தார். இதனைக் கேட்ட முனிசாமி தன செயலுக்கு மனம் வருந்தியதோடு தொழிற்சாலையை வேறு ஒரு இடத்தில் அமைத்துக் கொள்வதாகவும் சொல்லினான்.

அது சரி அப்போ அந்த தங்க சங்கிலி என்னாச்சு....

அதை நீங்க தான் சொல்லனும்.

சொல்லிக் கதையை முடிங்க..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...