சனி, 17 மார்ச், 2012

கிளை முறிந்த மரங்கள்

பாலூட்டி சீராட்டி பக்குவமாய் குளிப்பாட்டி
தேனும் திணைமாவும் தெள்ளுதமிழும் புகட்டி
நாம்பெற்ற மைந்தன் நலமாய் வாழ் வேண்டி
இளநங்கையெனும் மங்கை யொருத்தியைக்கூட்டி
இல்லறம் நல்லறமாய் வாழ வாழ்த்தினோமே!!

வந்த மகராசி வருசம் முடிவதற்குள்ளே
வார்த்தைகொண்டு வதைத்தெடுக்க; மனதை துளைத்தெடுக்க
நேரமெடுக்காமல் நெடுந்துயர் கொடுக்காமல்
வந்த மனகலக்கத்தையே வலிமையான ஆயுதமாய் பாவிக்க
என்னவள் என்னை விட்டு பிரிந்தாள் அவள்..
மண்ணுலக வாழ்வில் மறக்காத நினைவுகளோடு
விண்ணுலகில் எனக்காய் வீடுகட்டச்சென்றாள்.

கால்வயிற்றுக் கஞ்சியேனும் என் மகன்
கட்டிய மனைவி தருவாளென்று
நித்தமும் ஏங்கியே நிம்மதியைத்தொலைத்தேன்
வேலைக்கு அவன் செல்ல வெளியில் மிடுக்காய் இவள் உலாவ
கோலம் போடுவது முதல் கொழம்புச்சட்டி கழுவுவது வரை
பொறுப்பாய் நான் கற்றேன் ..
எல்லாம் நம் பிள்ளைக்காகத்தானே என்று..

தேற்றிய மனதிற்கு திடமாய் வந்தது
தித்திக்கும் ஒரு செய்தி
மாத பட்ஜெட்டில் விழும் துண்டை
மதிகொண்டு அகற்றிடவே மெனக்கு
மத்தியான சோத்தை போடா மென
நீளமான கதையொன்றை நித்தியரசியிடம் மகன் சொல்ல…

விடுவாளா சண்டாளி வேகம் பூட்டிய
வேட்டொன்றை வைத்தாள் எனக்கு
முழு நேர சோத்தையுமொரு நேரமே சாப்பிடுங்கள் மாமாவென்று
முற்றும் துறந்த முனிவனுக்குப் போலவே
மூன்று கரண்டி சாதம் மட்டும் தந்தாளே!!
பெற்றோரும் வேண்டாவே சுற்றத்தாரும் வேண்டாவே
தங்களாய் வாழ்ந்த நாங்களில் இன்று நான் மட்டும் நிற்க
என்னவள் என்னை விட்டுச்சென்றதன் காரணமேனோ??

யாரிடம் போய் எப்படி அழுவேன்?
எவரிடம் போய் என்னவென்று சொல்வேன்?
காலங்கள் நகர்த்தவே கடினமான வேளையினிலே
கால்களை நகர்த்தியே கடிதூரம் சென்றிற்றேன்
கிழக்கு வீதியினிலே கிழடுகளுக்கு இல்லமொன்று இருப்பதாய்
கில்லி விளையாடிய சிறுவன் சொல்ல ஆங்கே
கண்டேன் கருத்தொற்றிய பலபேரை
நலமாய் விசாரித்து பலமாய் வரவேற்க
நானும் கலந்திட்டேன்


சொந்தக்கதை சோகக்கதை சொல்லி அழப்போக
நாங்களும் அப்படியேமென்று
நகைத்துக்கொண்டே அவர்கள் கேட்க
கடவுளை கணநேரம் கருத்தில் வைத்தேன்
கிளை முறிந்த மரமாய் விடாமல்
கிளை முறிந்த மரங்களைக்கொண்டே
வனமொன்று உருவாக்கியதேனோ வென்று!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...