திங்கள், 19 மார்ச், 2012

திரும்பிப்பார்க்கின்றேன்.

திரும்பிப்பார்க்கின்றேன்.

அது ஒரு அழகான, அமைதியான கிராமம். அந்தக்கிராமத்திலே மருதப்பன் - முத்தம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். மருதப்பன் பெரும்செல்வந்தனாக இல்லாவிடிலும் ஒரு சிறு விவசாயியே.. அவர் சம்பாதித்தது, மூதாதையார் வழிச்சொத்து என சேர்த்து மொத்தம் 2 ஏக்கர் நஞ்சையும், 1.5 ஏக்கர் புஞ்சையும் தன் வசம் வைத்திருந்தார். அவர் பகல் பொழுது முழுதும் தனது விவசாய நிலங்களிலே வேர்வை சிந்த உழைப்பது அவருக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.


முத்தம்மாள் தன் வேலை, அவருடைய வேலை என பாரபட்சம் பார்க்காமல் நம் வேலையே என போட்டிபோட்டு தங்கள் கழனியில் வியர்வை சிந்த உழைத்துக்கொண்டிருந்தனர். இந்த தம்பதிகளுக்கு 3 பிள்ளைகள். மூத்தவன் கார்மேகம், அடுத்தது லட்சுமி, கடைக்குட்டி வசிகரன்.
லட்சுமி பிறந்த 8 வருடங்கள் கழித்தே வசிகரன் பிறந்தான். எல்லோருக்கும் வசிகரன் மேல் அலாதிப்பிரியம். வசிகரன் அளவற்ற பாசத்துடனும்,தனக்குள் ஒரு இறுமாப்புடனும் வளர்ந்து வந்தான்.

மூத்தவர் கார்மேகம் படிப்பில் அதிகம் விருப்பமில்லாமல் விவாசாய வேலை செய்வதையே மும்முரமாக கொண்டவர். அவரும் தன் பங்கிற்கு 10 வது வகுப்புவரை படித்து விட்டு விவசாயத்தில் ஈடுபட்டார். அடுத்தவர் லட்சுமி இவரும் தன் பங்கிற்கு காலேஜ் வரைக்கும் சென்று ஒரு டிகிரை வாங்கி விட்டார். நம் கடைக்குட்டியோ படிப்பில் பிரமாதம்.
ஒரு நாள்

“ஏங்க... நம்ம புள்ளைகளுக்கு வயசாகிக்கிட்டே போகுது, கல்யாணம் பண்ணி வைக்கிறதப்பத்தி என்ன யோசிச்சு வைச்சிருக்கீக..” இது முத்தம்மாளின் குரல்.

அப்பொழுது தான் காலையில் வயலில் தண்ணீர் பாய்ச்சி விட்டு காலைக்கஞ்சி குடிக்க திண்ணையில் உட்கார்ந்தார்.

“ஆமா முத்தம்மா.. நானும் இதப்பத்தி ஓங்கிட்ட சொல்லனும் நினைச்சேன். நம்ம மருவூரிலில ஒரு நல்ல வரன் இருக்குன்னு தரகர் தணிகாசலம் சொன்னார். வர்ர வெள்ளிக்கிழமை நாம போய் பார்த்துட்டு வந்துடுவோமா?” - இது மருதப்பனின் குரல்.

ஒருவழியாக எல்லோரும் சேர்ந்து வெள்ளிக்கிழமை கார்மேகத்திற்கு பெண் பார்த்து விட்டு வரலாம் என முடிவு செய்தனர். நினைத்தது போலவே கலையரசி மிகவும் அழகும், நல்ல அறிவும் நிரம்பிய பெண்ணாக தெரிந்ததால் அனைவரும் சம்மதித்தனர். நிச்சயிக்கப்பட்டபடியே கல்யாணம் நடந்தேறியது. மருதப்பன் தன்னிடம் உள்ள செல்வங்களை நல்ல முறையில் பண்படுத்தவும்,வளமான குடும்பமாக உருவாக்கவுமே மருமகள் தேவையேயொழிய வரதட்சணை கொண்டுவரும் வாகனமாக இருக்ககூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தன் உறுதியின்படியே சம்பந்தி வீட்டாரிடம் ஒரு பொட்டுபொடி கூட வாங்கவில்லை.
அதைப்போலவே அவர் மகளான லட்சுமியையும் ஒரு நல்ல வரன் தேடினார். அதே ஊரில் இருந்த மாரி என்னும் சொந்தக்கார மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தார். லட்சுமிக்கும் சிறிய அளவில் வீடு ஒன்று கட்டிக்கொடுத்தார்.

சந்தோஷத்திற்கு மேலாக சந்தோஷம் கிட்டும் விதமாக லட்சுமிக்கு ஒரு ஆண் குழந்தையும், கார்மேகத்திற்கு பெண் குழந்தையும் பிறந்தது.கார்மேகத்தின் பெண்குழந்தைக்கு மாதுரி என்றும் லட்சுமியின் ஆண்குழந்தைக்கு வசந்தன் எனவும் பெயர் வைத்தனர் நம் பெரியோர்கள்..

வசந்தனும், மாதுரியும் தன் ஊரிலே இருந்த பாலர் பள்ளியில் படிக்க வைத்தார் மருதப்பன். கிராமத்து வாசனையும், தாத்தா பாட்டியின் அன்பும் இரு செல்வங்களை நன்கு பதப்படுத்தியது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல் வேண்டும் , அடுத்தவருடன் நட்புடன் பழக வேண்டும் , யாருடனும் தேவையில்லாமல் சண்டை போடக்கூடாது என பல நல்ல செய்திகளை தன் பேரன், பேத்திக்கு அறிவுறுத்தியிருந்தார். குழந்தைகளும் தாத்தா பாட்டியின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தனர்.

வசிகரன் மேற்படிப்பு படிக்க பட்டணம் சென்றான். அங்கு ஏற்பட்ட ஆடம்பரக்காதலும், நட்பும் வசிகரனின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றப்போகின்றது என்பது அவனுக்கு அப்போது தெரியவில்லை. மருதப்பன் தன் பிள்ளை பட்டணத்தில் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காவே மாதாமாதம் பணம் அனுப்பிக்கொண்டே இருந்தார்.

பல்கலைகழகத்தில் சேர்ந்து படித்த நளினியிடம் தீராக்காதல் கொண்டான். நளினி குடும்பத்தைப்பற்றிச்சொல்ல வேண்டுமானால் மிகவும் கண்டிப்பான அதே சமயத்தில் ஒரு சமயம் கஷ்டப்பட்ட குடும்பம். ஆனால் நளினி தன்னால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என பலமுறை தன்னுள் புழுங்கியுள்ளாள். இதனால் தன் காதலனுடன் சந்தோசமாகவும் , ஆடம்பரமாகவும் சுற்றித்திரிந்தாள்.

மேற்படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தான். கையோடே காதலையும் கூட்டிகொண்டே திரிந்தான். இவர்களின் காதலை அறிந்த நளினியின் பெற்றோர் உடனே திருமணத்தை முடிக்க வேண்டும் என வசிகரனிடம் வற்புறுத்தினர். ஆனால் உடனே திருமணம் முடிக்க சம்மதமில்லை. இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் இப்படியே கழிக்கலாமே என தன் எண்ணத்தை பெற்றோரிடமும், வசிகரனிடமும் சொன்னாள்.

தங்கள் மகள் இவ்வாறு பொறுப்பற்று பேசுவதை நளினியின் பெற்றோர் வருந்தினர். எனவே வசிகரனிடம் “ நீ என் மகளை முறையாக திருமணம் செய்து கொண்ட பிறகே அவளை அழைத்துக்கொண்டு வெளியில் சுற்றலாம், அதுவரையில் நீங்கள் இருவரும் சந்திக்க அனுமதிக்க முடியாது” என உறுதியாகச்சொன்னார்கள்.

தன் அருமைக்காதலியின் பெற்றோர் கூறிய வார்த்தைகளை கேட்ட வசி..

தன் காதலியின் நினைவோடே ஊருக்கு அடுத்த வந்து தன் தாய் தந்தையரிடம் சண்டை போட்டான்

“அப்பா நீ எனக்கு உடனே கல்யாணம் பண்ணி வைக்கனும்”. - இது வசியின் ஆக்ரோஷமான குரல்.

“ வசி ஆத்திரப்படாதேயப்பா.. உன் அம்மாளும் நானும் உனக்கு ஒரு கால் கட்டு போட்டுடணுமுன்னு பேசிகிட்டு இருந்தோம், தோதா நம்ம தரகர் தணிகாசலம் நேத்துக்காலையில வந்தார். நல்ல படிச்ச குடும்பத்துப்பொண்ணுகளுக்கு வரன் தேடிக்கிட்டு இருப்பதாகவும் சொன்னார். நம்ம வீட்டில கல்யாண வயசுல நீ இருக்கிறதால உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனுமுன்னு நாங்க சொன்னோம். அதற்கு அவர் சில படங்களை எடுத்துக்காட்டினார். அதுல நம்ம கண்ட மங்கலம் வாத்தியார் பொண்ணு ரெம்ப அழகா இருந்துச்சு.. நல்ல படிப்பும் படிச்சிருக்கு, நல்ல குடும்பப்பொண்ணுன்னு நம்ம தரகர் வேற சொன்னார். அதற்கு நானும் உன் அம்மாளும் பையனும் வரட்டும் போய் பார்த்துடலாமுன்னு சொல்லி அனுப்புனோம்.” என அமைதியாக மருதப்பன் எடுத்துரைத்தார்.

"ஆமாப்பா நல்ல குடும்பமுன்னு சொல்றாக.. நம்ம கலையரசிக்கு ஏற்கனவே அந்தப்புள்ளய தெரியுமாம். நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுன்னு சொல்லுச்சு, நாம போய் பார்த்துட்டு வந்துடலாம்பா” இது முத்தம்மாளின் பாசக்குரல்.

தன் காதலையும், அதன் பின்பு ஏற்பட்ட நிகழ்வுகளையும் சொல்ல வந்த வசிக்கு ஒரே குழப்பம். தன் காதலியின் காந்தமுகம் கண்ணிலாடவே தாய் தந்தையரை வெறுப்புடன் பார்த்தான்.

“ஏய் , கிழங்களா நான் என்ன உங்களை பொண்ணு பார்க்கவா சொன்னேன். என்ன கண்ட மங்கலம் வாத்தியார் மகளா ? இல்ல காணாத மங்கலம் போலீஸ் காரன் மகளா ? அவள நான் கட்டிகிட்டு உங்களோடே இந்தக் காட்டுல காலத்தை ஓட்டணுமா?” என சாமி வந்தவன் போல் கத்தினான்.

வசி தன் பெற்றோரை திட்டியுள்ளான் ஆனால் இது வரையிலும் தங்களை இவ்வளவு தரம் குறைய பேசியதே இல்லை என அதிர்ந்து போயிருந்தனர் இருவரும்.

அதே நேரத்தில் வயலுக்கு வேலைக்குப்போயிருந்த கார்மேகமும், கலையரசியும் ஒருவருக்குபின் ஒருவராக கையில் ஆளுக்கொரு பசுமாட்டை பிடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.பள்ளிக்கூடம் போய்விட்டு தெருவில் விளையாடப்போயிருந்த மாதுரியும் , வசந்தனும் வசி வந்திருப்பதைக்கேட்டு ஓடி வந்தனர்.

வசியின் குரல் கார்மேகத்தின் காதில் பட்டும்படாமலும் கேட்டு விட்டது.

“ அட நம்ம வசி ! எப்பப்பா வந்தே? நல்லாருக்கியா ? படிப்பெல்லாம் எப்படி போய்கிட்டுருக்கு? “ கேள்விகளாய் அடுக்கினார் கார்மேகம்.

“ வாங்க தம்பி ! இப்பத்தான் வந்தீங்களா? இருங்க குடிக்க காபி தாரேன்” இது பாசக்கார அண்ணி கலையரசி.

அதற்கு வசிகரன் “ காப்பியும் வேணாம் ஒன்னும் வேணாம்” என எரிந்து கொண்டே சொன்னான்.

”என்ன விசயமாய் இவ்வளவு கோபப்படுகிறாய்” என சாந்தமாய் கேட்டார் கார்மேகம்.

தான் வந்த செய்தியை சொல்ல ஆரம்பித்தான். தான் பட்டிணத்தில் ஒரு பெண்ணை உயிருக்குயிராக காதலிப்பதாகவும், அவளும் தன் மீது உயிராய் இருப்பதாகவும், தங்களின் காதலுக்கு அவளின் பெற்றோர் கொடுத்த சவுக்கடிச்செய்தியையும் சொன்னான்.

இதனைக்கேட்ட மருதப்பன் பட்டிணத்துப்பெண் நம் குடும்ப பாரம்பரியத்துக்கு அவ்வளவாக ஒத்துப்போக மாட்டாள், அவள் நகர வாழ்க்கை எனும் மோகத்தில் எங்களிடமிருந்து உன்னை பிரித்துச்சென்றால் எங்களால் தாங்கமுடியாது என புலம்பினார்.

இதனைக்கேட்ட வசி ஆத்திரத்தில் கத்தினான் . தான் அவளைத்தான் கட்டாயம் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், முடிந்தால் திருமனதிற்கு தாங்கள் இருவரும் வரலாம். இல்லையெனில் இங்கேயே இருந்து கொள்ளுங்கள் என சொன்னான்.

இதனைக்கேட்டு கார்மேகம் ஆத்திரமுற்றார். “ என்னடா ..பேச்சு ரெம்ப பெரிசா போகுது.. நாங்க வராம நீ கல்யாணம் பண்ற அளவுக்கு துணிச்சிட்டாயா ?” என கத்தினார்.

” நீங்க யாருமே இல்லாம என்னால கல்யாணம் கட்டிக்கிற முடியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறீர்களா? நீங்க யாருமே தேவையில்லை எனக்கு, நான் என் நளினியோடு சந்தோசமா இருக்கப்போறேன். நீங்களும் வேணாம், உங்க உறவுகளும் வேணாம்” என வெட்டி வீராப்புடன் மீண்டும் அடுத்த நாள் காலையில் பட்டணத்திற்கு கிளம்பிப்போனான்.

தன் கிராமத்தில் நடந்த செய்திகளை நளினியின் பெற்றோருக்கு எடுத்துரைத்தான். எல்லாவற்றையும் கேட்ட நளினியின் அப்பா ஒரு முடிவுக்கு வந்தார். ஒரு குறிப்பிட்ட நன்னாளில் திருமணம் முடித்து விட வேண்டியது தான் என வசியிடம் சொன்னார்.

தங்கள் திருமணம் எளிதாக நடைபெறக்கூடாது என்றும், பலவகை விருந்துகளுடன், ஆட்டம் பாட்டமாக உயர்தர நட்சத்திர விடுதியில் தான் நடக்க வேண்டும் என தன் ஆசைக்காதலனுக்கு வாஞ்சையோடு சொன்னாள். அவ்வாறே தன் பெற்றோரிடமும் எடுத்துரைத்தாள்.

தன் ஒரே மகளின் திருமணத்தை அவள் ஆசைப்பட்டபடியே நடத்திவிட வேண்டியது தான் என நளினியின் பெற்றோர் முடிவெடுத்து நாளும் குறித்தனர். நட்சத்திர விடுதியும் புக் செய்யப்பட்டது..

அன்று திருமணத்திற்கான பத்திரிக்கை அடித்து வந்தது. அதில் தான் கேட்டுக்கொண்டபடியே தன் பெற்றோர் பெயர், அவர்களின் சொந்த ஊரின் பெயர், உறவுக்காரர்களின் பெயர், என ஒரு வரியும் இடம் பெறாதது கண்டு மகிழ்ந்தான். ஆனால் நளினியின் அப்பாவிற்குத்தான் சின்ன வருத்தம்.

கல்யாணத்திற்கு வருபவர்கள் வசிகரனின் பெற்றோர் யார் எனக்கேட்டால் அவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்வது என்றும் அதனால் தங்களுக்கு பெருத்த அவமானமாய் போய் விடும் எனக்கருதி தாங்களே வசியுடன் கிராமத்திற்குச்சென்று அவர்களிடம் நிலைமையைச்சொல்லி வரவைப்பது என முடிவெடுத்தனர்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலையில் பேருந்து பிடித்து கிராமத்திற்கு புறப்படத் தொடங்கியவர்கள் மாலை 3 மணியளவில் வசியின் வீட்டை வந்தடைந்தனர்.அங்கே பெரியவர்கள் யாரும் வீட்டில் இல்லை அனைவரும் வயலில் வேலைக்குச்சென்றிருந்தனர். மருதப்பனின் பேரக்குழந்தகளுக்கு ஞாயிறு விடுமுறையாதலால் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தனர். வீட்டிற்கு இவர்கள் வந்ததும் இருவரும் தாத்தா பாட்டியைக்கூப்பிட இருவரும் வயலுக்கு ஓடிச்சென்றனர்.

“ தாத்தா, தாத்தா வசி சித்தப்பாவோட ரெண்டு விருந்தாடி நம்ம வீட்டுக்கு வந்திருக்காக.. சித்தப்பா உங்கள வீட்டுக்கு வரச்சொன்னாக” இது மாதுரியின் குரல்.

எல்லோரும் வேலையை வேகவேகமாக ,அரைகுறையாக முடித்துவிட்டு வீட்டிற்குத்திரும்பினர். வந்திருந்த பெரியவர்களை வரவேற்றார்கள் மருதப்பனும் முத்தம்மாளும். கலையரசியும் தன் பங்கிற்கு வாங்க என சொல்லிவிட்டு அடுப்பில் உலையை வைத்தாள்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலே கார்மேகமும் வீடு வந்து சேர்ந்தான். வசியின் பிடிவாதத்தால் தங்களால் திருமண பத்திரிக்கையில் யாருடைய பெயரும் அச்சிடவில்லை என்றும், நிச்சயதார்த்ததிற்கு கூட அழைக்க வில்லை என தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச்சொன்னனர். இவர்களின் பேச்சைக்கேட்டு மருதப்பன் அதிர்ந்து போய் விட்டார். ஆனால் கார்மேகம் ஒரு வித எண்ணத்தோடே ஏளனச்சிரிப்பு சிரித்தார்.

காதில் கேட்டபடியே முத்தம்மாளும், கலையரசியும் சாப்பாடு சமைத்து முடித்தனர். சாப்பிட வருமாறு அனைவரையும் அழைத்தனர். இறுதியாக மருதப்பனும், கார்மேகமும் தாங்கள் அப்புறம் சாப்பிட்டுக்கொள்வதாகவும், முதலில் வந்த விருந்தாளிகளுக்கு உணவு கொடுக்குமாறு கலையரசியிடம் சொன்னார்கள். நளினியின் பெற்றோருடன், வசியும் சாப்பிட அமர்ந்தான். நளினியின் பெற்றோர் கலையரசியின் கை பக்குவததை மெச்சிக்கொண்டே சாப்பிட்டனர்.

மருதப்பனும், கார்மேகமும் இதனைப்பற்றிய சிந்தனையில் இறங்கினர். ”லட்சுமியையும் வரச்சொல்லு; அவள் தன் பங்கிற்கு என்ன சொல்றான்னு பார்ப்போம்” என மருதப்பன் கார்மேகத்திடம் சொன்னார்.

அங்கே லட்சுமியும் வந்து சேர்ந்தார்.

இதற்கிடையில் சாப்பிட்டு முடித்த நளினியின் பெற்றோர் கிராமத்தில் இருக்கும் வசியின் வயல்கள், தோட்டம் ஆகியவற்றையும், அங்குள்ள கோயில்களையும் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டனர். அவர்களோடே வசியும் சுற்றிக்காட்ட சென்றான். லட்சுமி வீட்டிற்கு வந்து அங்கு நடந்தவைகளை கேட்டறிந்து கொண்டார். என்ன செய்யலாம் என அனைவரும் ஒன்று கூடி ஆழ்ந்த ஆலோசனையில் இறங்கினார்கள்.

”இதில் யோசனை பண்ண என்ன இருக்கு? நம்மள மதிக்கல, நாம அங்க போனா அவமானப்படுத்தான் வரணும், அதனால நான் சொல்றேன் யாரும் போக வேண்டாம்” என கார்மேகம் சொன்னார்.

“நம்ம யாரும் அங்க போகலைனா நம்ம புள்ளைக்கு அங்க சொந்தமுன்னு சொல்ல யாருமே இருக்க மாட்டாங்க. அதனால நாம எல்லோரும் போயிட்டு வரலாம்” இது கலையரசியின் குரல்.

கலையரசியின் குரலை மருதப்பனும், முத்தம்மாளும் கோரஸாக ஆதரித்தனர். ஆனால் தன் பிடியை விடாமல் பேசினார் கார்மேகம்.

“ சரி அண்ணே ! எனக்கோ கல்யாணத்துக்குப்போக மனசில்லை, நீனும் போக மாட்டேன்னு அடம்பிடிக்கிறீக.. அப்பா , அம்மா மட்டும் போயிட்டு வரட்டும்” என நாட்டாமை போல தீர்ப்பு சொன்னார் நம் லட்சுமி. இது நல்ல முடிவு என அனைவரும் ஒரு சேர ஆதரித்தனர்.

சுற்றிப்பார்க்க போனவர்கள் பொழுதிருட்டும் போது திரும்பி வந்தனர். வந்தவர்கள் பயணக்களைப்பாக இருந்ததால் விரைவிலே தூங்க புறப்பட்டனர். காலையில் பட்டணம் செல்ல வேண்டும் எனச் சொன்னார்கள்.அவர்கள் படுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து விட்டு முத்தம்மாள் வீட்டின் திண்ணையில் வந்து அமர்ந்தார்.

பின்னர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டுவிட்டு படுக்கச்சென்று விட்டனர். மறு நாள் காலையில் மருதப்பன், நளினியின் அப்பாவிடம் வயலில் கொஞ்சம் முக்கியமான வேலை இருப்பதால் அனைவரும் வர இயலாது எனவும், யாரேனும் இருவர் வருவார்கள் என சொன்னார், சரி யென சொல்லிவிட்டு அனைவரும் சென்றனர்.

குறித்த நாளில் திருமணம் வெகு ஆடம்பரமாய் நடக்க ஆரம்பித்தது. மருதப்பனும், முத்தம்மாளும் மட்டுமே திருமணத்திற்குச்சென்றிருந்தனர்.அவர்களுக்கு நடக்கும் ஆடம்பர நிகழ்ச்சியை பார்க்க பார்க்க வீட்டிற்கு வந்த வழியே ஓடிப்போய் விடலாம் எனத்தோன்றியது. ஆனால் மாப்பிள்ளை நம் பிள்ளையாயிற்றே என பொறுமைகாட்டி வந்தனர்.

திருமணம் முடிந்து நட்சத்திர விடுதியில் இரவில் விதவிதமான உணவுகள் ப‌ரிமாறப்பட்டன.ஆட்டபாட்டங்களும் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தது. தங்களுக்கு இந்த மாதிரியான உணவுகள் பிடிக்காது என சொல்லி விட்டு இரவுப்பொழுதை இருவரும் பட்டினியாகவே கழித்தனர். இவர்களின் இந்தபாங்கு குறித்து நளினி வசியின் காதில் “ உங்க அப்பா,அம்மா சரியான பட்டிக்காடுகள், இங்கிதம் தெரியாதவர்கள் “ என முணுமுணுத்தாள்.

அடுத்த நாள் தாங்கள் ஊருக்கு கிளம்ப வேண்டும் என இருவரும் கிளம்பிவிட்டனர். கிளம்பும் போது வசியிடம் “ தம்பி ..ரெம்ப செலவு செய்து கல்யாணம் நடத்திருப்ப போல தெரியுது. அண்ணன் குடும்பமோ , அக்கா குடும்பமோ வரலைன்னு கோபபடாதே.. கையில செலவுக்கு காசு இருக்கா? ஊருக்கு போயி ஏதாச்சும் அனுப்பி வைக்கவா ?”என மருதப்பன் தன் மகனிடம் கேட்டார்,

அதற்கு வசி “ நீ கொடுக்கிற காச வச்சு இங்கு புண்ணாக்கு வாங்கவா? நீஙக இருவரும் இங்க வந்ததே ரெம்ப அவமானமா நெனக்கிறேன். இதுல அக்காவாம், அண்ணனாம்” என வசி அலட்சியமாய் பதிலளித்தான்.
வசியும் தன் மாமனார் வீட்டில் ஒரு வார காலம் தங்கினான். கல்யாணச்செலவுகளை பொறுத்தவரை தன் பெற்றோரிடம் கேட்டால் தன்னை மதிக்க மாட்டர்கள் என்ற தேவையில்லாத வரட்டு கவுரத்தோடே வெளியில் 10 வட்டிக்கு கடன் வாங்கித்தான் செய்திருந்தான்.

மாமனார் வீடும் நடுத்தரக்குடும்பத்தைச்சேர்ந்தவர்களே. அவர்கள் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணம், நகை என அனைத்தும் நளினியின் திருமணத்திற்கே செலவழித்தனர்.

நளினி வெளியே தனியே வீடு வாடகைக்கு எடுத்து தங்கலாம் என்று வசியிடம் சொன்னாள். வசியும் அதுவும் சரியென்று தனியேஒரு ப்ளாட்டில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்தனர். வீட்டையும் தன்னையும் அலங்கரிக்கத்தொடங்கி விட்டாள். வசி திருமணத்திற்கென வாங்கிய கடனோடு கூடுதலாக கடன் சேர்ந்தது.

தன் ஆசைக்காதலிக்கு ஆசைப்பட்ட பொருட்களை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் நளினியின் அளவுக்கு மீறிய ஆசைகளை அவனால் வெளியில் சொல்ல முடியவில்லை. தான் வேலை பார்த்த நிறுவனத்தில் தான் புதியவர் என்றபடியாலும் , அனுபவம் குறைவு என்ற காரணத்தாலும் பதவி உயர்வு கிட்டாமல் அதே சம்பளத்தில் வேலையைத்தொடர்ந்து கொண்டிருந்தான்.

இழுத்துப்பிடித்து இவர்களின் வாழ்க்கைச்சக்கரம் சுழன்று கொண்டிருந்தது.. ஒரு வருடம் கழித்து வசிக்கு ஒரு ஆண் பிள்ளை பிறந்தது. எல்லையில்லா மகிழ்வு இருவருக்குமே.. வசி மாமனார் வீட்டில் நளினியை பிரசவத்திற்காக விட்டிருந்தான், அவர்களும் பேரன் பிறந்த செய்தியை மருதப்பன் தம்பதியருக்கு தெரிவித்தனர். தங்கள் பேரப்பிள்ளையை காண வேண்டும் என்னும் ஆவலில் மருதப்பனும்- முத்தம்மாளும் பட்டணம் வந்திருந்தனர். அலுவலகம் முடிந்து விட்டு நேராக நளினியை பார்க்க வந்த வசி தன் பெற்றோரைக்கண்டு ஆத்திரமுற்றான்.

“ இவர்களை யாரு இங்க வரச்சொன்னது? நான் என்ன இவுகளை கூப்பிட்டேனா? எங்கே என்ன நடக்குதுன்னு மோப்பம் புடிக்கிறதே வேலையா போச்சு இந்த கிழங்களுக்கு” என எரிச்சலோடே மாமனாரிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

அதனைக்கேட்ட மாமனார் தானே அவர்களுக்கு செய்தியை தெரிவித்து வரச்சொன்னதாகச்சொன்னார். இதனைக்கேட்ட வசி ஓரளவு கூலானான். சிறிது நேரத்திற்குப்பின் மருதப்பனும், முத்தம்மாளும் தங்களின் கிராமத்திற்கு கிளம்பிச்சென்றனர்.

எளிமையாய் தான் நளினியின் வளைகாப்பு வைபவம் நடந்தது. அதனால் பெயர் சூட்டும் விழா வெகு விமரிசையாக நடக்க வேண்டும் என அடம்பிடித்தாள். நளினியின் விருப்பம் போலே ஒரு நன்னாளில் பெயர் சூட்டும் விழா நிகழ்ந்தது. மயூரப்பிரியன் என்ற அழகான பெயரை குழந்தைக்கு வைத்தனர்.

நளினி தன் கணவனிடம் “ நம் வீட்டிற்கு போய் விடுவோம்” எனக்கூறினாள். அதன் படியே அடுத்த இரு நாட்கள் கழித்து வீட்டிற்குச்சென்றனர்.

குழந்தையை வைத்துக்கொண்டு தன்னால் வீட்டு வேலைகளை பார்க்க முடியாது எனவும் ஒரு வேலைக்காரி வேண்டும் எனவும் வசியிடம் சொன்னாள். சொன்னபடியே ஒரு வேலைக்காரியும் பணிக்கு அமர்த்தப்பட்டாள். நாட்கள் செல்லச்செல்ல வேலைக்காரியை நிரந்தரமாக தங்கள் வீட்டிலே வேலை செய்ய வைப்பது என இருவரும் முடிவெடுத்தனர். நளினி தனக்கு வேலைகள் குறைந்து தற்போது தான் தேவையான ஓய்வு கிடைத்துள்ளதாக எண்ணிக்கொண்டாள். இப்போதெல்லாம் நளினிக்கு தற்போது அடுத்த வீட்டு, எதிர் வீட்டுபெண்களுடன் அரட்டை அடிப்பது, அவர்களுடன் கடைகளுக்குச்செல்வது, சினிமாவிற்குச்செல்வது போன்ற வேலைகளே ஆகும். குழந்தை கூட தற்போது வேலைக்காரியின் பராமரிப்பில் தான் அதிக நேரம் இருக்கின்றது.

ஒரு நாள் இரவு சாப்பிடும் பொழுது வசியிடம் “ என்னங்க.. நான் ஒன்று சொல்லட்டுமா?” எனக்கேட்டாள்.

அதற்கு வசி “ என்ன . சொல்லு” என்றான்.

“ எத்தனை நாளைக்குத்தான் நாம் இப்படியே கஷ்டப்பட்டு கொண்டிருப்பது, உங்களுக்கும் ப்ரமோஷன் ஆன பாடில்லை, பேசாம நாமகவே ஒரு தொழில் தொடங்கலாம் தானே “ என தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்.

“என்ன.. நம்ம தொழில் தொடங்குறதா? அதுக்கு பணம் வேணுமே.. எங்கே போய் வாங்குறது? ஏற்கனவே வாங்கிய கடனுக்கு இன்னும் வட்டி கட்டி தீர்ந்த பாடில்லை, இனிமேல் நம்மளை நம்பி கொடுப்பதற்கு ஆட்கள் இருக்கா என்ன?” இது வசியின் குரல்.


அதற்கு நளினி “ உங்களுத்தான் கிராமத்துல சொத்துக்கள் இருக்குதுன்னு சொன்னீர்களே , அதில உங்க பங்க வாங்கி விற்று நாம் தொழில் தொடங்கலாமே”

“ அதுவும் நல்ல ஐடியாவாகத்தான் தெரிகின்றது, சரி நாம என்ன தொழில் தொடங்கலாம்?” என வசி கேட்டான்.
அதற்கு ஜுஸ் கம்பெனி தொடங்கலாம் என்றாள். “ எனக்கு அந்த துறையில் A,B,C,D யே தெரியாதே. எப்படி தொடங்குவது ?”என்றான்.

"நாம் படும் கஷ்டத்தைப்பார்த்து எதிர்வீட்டு அக்கா தன் தம்பியைப்பற்றியும்,அந்தத்துறையில் நன்கு கைதேர்ந்தவன் என்றும் அவன் தற்போது பிரபல கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். நாம் அவனின் உதவியைக்கேட்டால் நிச்சயம் செய்வான் எனவும் சொன்னார்கள்” இது நளினியின் விளக்கம்.

ஒரு நாள் தன் கிராமத்திற்குச்சென்று தன் பங்கை பிரித்துதர வேண்டும் என தந்தையிடம் சண்டை போட்டான் வசி.இதற்கு மருதப்பன் சம்மதிக்க வில்லை. பெரும் பஞ்சாயத்தே நடந்தேறி விட்டது. அதன் பின்பு தன் சொத்துக்களை மூன்று பங்காக பிரித்து அதனில் ஒரு பங்கை வசிக்குக்கொடுத்தனர். வசி தன் நிலங்களை விற்கப்போவதாக அப்பொழுதே அறிவித்தான். அறிவித்த படியே அந்த இடங்களை அந்த ஊரில் இருந்த ஒரு பணக்காரருக்கு விற்று பணத்தோடு பட்டணம் வந்தான்.

பட்டணம் வந்து தன் வேலை பார்த்த நிறுவனத்தில் வேலையை விட்டு விலகிகொள்வதாக கடிதம் அளித்தான். இதனையறிந்த கடன் காரர்கள் வசியை பணத்தைக்கேட்டு நெருக்கினார்கள். தான் புதிய தொழில் தொடங்கப்போவதாகவும் அதில் கிடைக்கும் லாபத்தைக்கொண்டு இன்னும் இரண்டு மாதத்தில் தங்களிடம் வாங்கிய கடனை அடைத்துவிடுவேன் என்று உறுதியளித்தான்.

அடுத்த வீட்டு அக்காளின் தம்பியான ஆனந்தைக்கொண்டு புதிதாக தொழிற்சாலையை அமைத்தான், அவன் சொன்னபடியெல்லாம் வசி ஆடும் பொம்மையாய் மாறி விட்டான். நளினியின் ஆசைப்படியே புதுக்காரும் வாங்கப்பட்டது. நகைகளும் வாங்கப்பட்டது. தொழிற்சாலையில் நல்ல முறையில் தொழில் போய்க்கொண்டு இருந்தது.

இடையில் ஒரு நாள் ஆனந்த் தமக்கு இங்கு சம்பளம் வேண்டாம். பங்கு தான் வேண்டும், அதிலும் சமபாதியான பங்கு வேண்டும் என வாதிட்டான். தான் இல்லாவிடில் ஒன்றும் அசையாது எனவும் பெருமைபட எடுத்துரைத்தான். ஆனந்த் அனைத்து தொழிலாளர்களிடமும், வியாபாரிகளிடமும், நல்ல ஒரு தொடர்பை வைத்திருந்தான்.

வசிக்கு காலம் மாற்றி சுற்ற ஆரம்பித்து விட்டது. ஆனந்தின் செய்தியை அப்படியே நளினியிடம் தெரிவித்தான். அதற்கு நளினி “இவன் போனால் என்ன? நமக்கு இவனைப்போல் ஆயிரம் பேர் பணத்தை அள்ளி வீசினால் கிடைக்கக்கூடும்” என பெருமாப்புடன் பேசினாள்.

நளினியின் சொற்படி ஆனந்தை வேலையை விட்டு நீக்கினான். ஆனந்தோடே சில முக்கிய அதிகாரிகளும் வேலையை விட்டு நின்று கொள்வதாக அறிவித்தனர். அடுத்து புதிதாக தொழில் நுட்ப வல்லுனர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்., அவருக்கு இந்ததுறையில் அனுபவம் மிகக்குறைவு. இருந்தாலும் வேலைக்கு ஆட்கள் வேண்டுமே என்ற காரணத்திற்காகவே அமர்த்தப்பட்டனர்.

நாட்கள் செல்லசெல்ல ருசி குறைந்து கொண்டே சென்றது. சந்தையில் நல்ல விளம்பரத்தோடு இருந்த இவர்களின் ஜூஸ் மதிப்பிழந்தது.

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது, கடன்காரர்கள் மறுபடியும் கழுத்தை பிடிக்க வந்தனர். வேறு வழியில்லாமல் ஆனந்திடமே அடிமாட்டு விலைக்கு தம் தொழிற்சாலையை விற்று விட்டான். பெரும் போராட்டத்திற்குப்பின் நளினியின் நகைகளையும் விற்க நேர்ந்தது. காரும் அதற்குரிய தவணையை முழுதாக கட்டாததால் ஏலத்தில் சென்று விட்டது. ஒருவழியாக முக்கால் வாசி கடன்களை அடைத்து விட்டான்.

ஏறக்குறைய அன்றாடங்காய்ச்சிகளின் நிலைக்கு வந்து விட்ட வசி... தாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல் போனதால் அந்த வீட்டையும் காலி செய்து விட்டு அதனை விட வசிதியில் குறைந்த வீட்டை வாடகைக்கு அமர்த்தினர். அவனால் மற்ற வேலைகள் செய்யத்தெரியாததால் அலுவலக வேலைக்காக அலைந்து ஓய்ந்து போனான். வீட்டில் இருந்த பொருட்களும் ஒவ்வொன்றாய் விற்று பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தனர்.

நளினிக்கு தற்போது சிந்தனையில் தான் செய்த ஆடம்பரமும், அலட்சிய போக்குமே தங்கள் நிலைக்கு காரணம் என்பதை உணர்ந்தாள். வேறு வழியில்லாமல் தாங்கள் கிராமத்திற்கு செல்வதென முடிவெடுத்தனர்.எல்லாம் இழந்து வெறும் ஆட்களாய் தன் மகன் மயூரப்பிரியனோடு மதியப்பசியோடும் கிராமத்திற்குச்சென்றனர். கிராமத்தில் இவர்களைக்கண்டதும் கார்மேகம் என்ன நடந்தது எனக்கேட்காமல் பாராமுகமாய் தன் வேலையைப்பார்க்க சென்று விட்டார். மருதப்பன் காலையிலே வயலுக்குச்சென்று விட்டார். வீட்டில் இருந்த கலையரசியும், முத்தம்மாளும் வந்தவர்களை உள்ளே வரச்சொன்னார்கள்.

சிறிது நேரத்திலே லட்சுமியும் ஆங்கே வந்தாள். வசி தன் மனைவியோடு வீட்டிற்கு வந்திருப்பதை கார்மேகம் தன் அப்பாவிடம் சொன்னார். இதனைக்கேட்டு மருதப்பன் கார்மேகத்தோடு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.


நடந்த அனைத்து நிகழ்வுகளையும் கேட்டு விட்டு அமைதியாய் மருதப்பன் “ நாங்களெல்லாம் வேண்டாம் என நீ சென்றாய், இன்று நீ எல்லாத்தையும் இழந்து விட்டு வந்து நிற்கின்றாய், பணம் தானே போச்சு, அதனாலென்ன மறுபடியும் சம்பாதித்து விட வேண்டியது தானே” என்றார்.


அதற்கு வசி தான் நடந்து கொண்டதையெல்லாம் மறந்து மன்னிக்க கோரினான். அனைவரிடம் அழாத குறையாய் வேண்டி நின்றான்.
அதற்கு மருதப்பன் “ நீ என் பிள்ளை , என்ன செய்து விட்டு நீ வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வது தான் பெற்றவர்களின் பாசம் என்றாலும் உன்னை வா என்றழைக்க எங்களில் அனைவருக்கும் ஒருமித்த கருத்து இல்லை. இங்கு ஏன் இல்லை என்ற கேள்வியையும் உன்னால் எழுப்ப முடியாது, உங்களுக்கெல்லாம் பாகப்பிரித்தபின்பு எங்களுக்கென்று ஒரு தோட்டமும், 4 வயல்களும் வாங்கினோம்.அதில் அனைவரின் பங்களிப்பும், உழைப்பும் உள்ளது. இருப்பினும் அந்த இடத்தை உனக்குத்தருகின்றேன், முடிந்தால் பிழைத்துக்கொள் “ என சொன்னார்.


கார்மேகமும் தன் பங்கிற்கு சரியென ஒத்துக்கொண்டார். இறுதியில் அந்த தோட்டத்தில் வசி தன் நளினியோடும் , மயூரப்பிரியனோடும் அங்கு தங்கினான்.

தனக்கு தெரிந்த வேலைகளை செய்ய ஆரம்பித்தான், கிராமத்து வாசனையில் அவன் வளர்ந்திருந்ததால் அவனால் எளிதாக வேலை செய்ய முடிந்தது. ஆனால் நளினிக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக தெரிந்தாலும் படிப்படியாக கற்றுக்கொண்டாள்.

ஒரு நாள் வெளிமுற்றத்தில் இருந்த கயிற்றுக்கட்டிலை சரிசெய்து கொண்டு அதனில் படுத்து வானத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டே இருந்தான். வானத்தில் முழு நிலவு சுடர் வீசிக்கொண்டிருந்தது. நளினி அருகே அமர்ந்து “ என்னங்க .. அப்படியே பார்த்துக்கிட்டு இருக்கீக.. ” என்றாள்.


தன் நிலைக்குத்திரும்பிய வசிகரன் “ நான் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்க்கின்றேன்.. கூடவே திருப்பியும் பார்க்கின்றேன். இனியாவது திருத்தப்பார்க்கின்றேன்” என அடுக்கு மொழியிலே அடுக்கினான்.


முற்றியது....


நன்றி
:salute: :salute: :salute:



2 கருத்துகள்:

  1. ஒவ்வொருவரும் உணர்ந்து உறவுகளின் பாசத்தை புரிந்து வாழ்தல் வேண்டும்.அதுவே நன்மைபயக்கும். தேவையில்லாத ஆடம்பரமும் பகட்டும் கைகொடுக்காது என்பதை அழகாக காட்டுகிறது உனது கதை.

    இப்படிப்பட்டோருக்கு இது ஒர் பாடம் ஆகும். நன்றி!

    பதிலளிநீக்கு
  2. அதிரடியாய் படித்த மாத்திரத்திலே மறுமொழியிட்ட அக்காவிற்கு நன்றிகள் பற்பல..!


    அடுத்தவன் சொல்லுக்காக வாழும் வாழ்வு நமக்கு இனிப்பதில்லை. அப்படியே நிலைப்பதுமில்லை என்ற கருத்து தாங்கி தான் இக்கதையினையே படைத்தேன். தெளிவற படித்து சிறப்பான மறுமொழி அக்கா.

    நன்றி

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...